உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிதாக 5000 மின் மீட்டர்கள்

திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிதாக 5000 மின் மீட்டர்கள்

திண்டுக்கல் : ''திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிதாக 5000 மின் மீட்டர்கள் வந்துள்ளது''என திண்டுக்கல் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பிரபாகரன் தெரிவித்தார்.மின் கம்பங்கள் சேதமாகி சாயும் நிலையில் உள்ளதே...இம்மாதம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2000 மின்கம்பங்கள் வந்தது. அவற்றை தேவைப்படும் அதிகாரிகள் வாங்கி தங்களுக்குரிய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருகின்றனர். சேதமான, சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளர்களுக்கு தெரியப்படுததலாம். உடனே மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

குறைந்த மின்னழுத்தம் பெரும் பிரச்னையாக உள்ளதே...

இதுபோன்ற பிரச்னைகள் குறித்த புகார்கள் எப்போதாவது வருகிறது. அந்த நேரத்தில் மின் ஊழியர்கள் சம்பந்தபட்ட பகுதிகளுக்கு சென்று சரி செய்கின்றனர். எந்த நேரத்திலும் மின் வாரிய அலுவலர்களை அணுகலாம். 24 மணி நேரமும் மக்கள் பணியில் சுழற்சி முறையில் ஈடுபடுகிறோம்.

புதிய மின் மீட்டர்கள் வந்துள்ளதா...

மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட புதிய விண்ணப்பதாரர்களுக்காக 5000 மின் மீட்டர்கள் வந்துள்ளது. அவைகளை சம்பந்தப்பட்ட மின் உதவி செயற்பொறியாளர் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மின் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதா...

தற்போது தேவையான அளவிற்கு உள்ளது. மழைக்காலங்களிலும் குழுக்களாக பிரிந்து பணியாற்றுகிறோம்.

மின் ஒயர்களை உரசியபடி நிற்கும் மரங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறதே....

மின்கம்பங்களை உரசியபடி நிற்கும் மரக்கிளைகளை நாங்களே அகற்றுகிறோம். வீட்டு உரிமையாளர்களிடமும் நீளமான மரக்கிளைகளை அகற்றுவதற்கு அறிவுறுத்துகிறோம்.

பல பகுதிகளில் தாழ்வாக மின் ஒயர்கள் செல்கிறதே...

மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அடிக்கடி மின்தடை ஏற்படுகிறதே...

மாவட்டத்தில் மின்தடை குறைவு தான். மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படுத்துப்படும். அதுவும் முன்கூட்டியே முறையாக அறிவிக்கப்படுகிறது. அந்த நேரங்களில் பழுதான டிரான்ஸ்பார்மர்களை சரி செய்வது போன்ற பணிகளில் மின் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இடி,மின்னல் போது எதிர்பாராத விதமாக பீங்கான்களால் செய்யப்பட்ட இன்சுலேட்டர் எனும் கருவிகள் அடிக்கடி சேதமாகிறது. அந்த நேரத்தில் மட்டும் மின்தடைகள் ஏற்படுகிறது. அதையும் சரி செய்து மின்சாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம். மழைக்காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதிகளில் வீடுகளுக்கு பெறுவது போல் காட்டேஜ்களுக்கு மின்வசதி பெறுகிறார்களே...

புகார்கள் குறித்து ஆய்வுகள் நடந்துவருகிறது. முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு மின்வாரிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மூலம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை