திண்டுக்கல் : கால்நடைகளான ஆடு, கோழி, பசுக்களை கோடை வெப்பத்திலிருந்து காக்க அறிவுரை வழங்கிய மருத்துவர்கள் ,காலை 10:00 முதல் மாலை 4:00 வரை வெளியே வீடாதீங்க எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.திண்டுக்கல்லில் நிலவும் கடுமையான கோடை வெப்ப தாக்கத்தால் கறவை பசுக்களுக்கு உடல் அழற்சி ஏற்படுகிறது. இதை தடுக்க மேய்ச்சல் நேரத்தை காலை 6:00 முதல் 10:00 மணி , மாலை 4:00 முதல் இரவு 7 :00மணி வரை என மாற்றி அமைத்து கொள்ள வேண்டும். பால் உற்பத்தி, சினைமாட்டு கன்று வளர்ச்சி குறையாமல் இருக்க போதிய பசுந்தீவனம், பசும்புல் வழங்க வேண்டும். பசுக்களின் உடல் வெப்பத்தை தணிக்க மதிய வேளைகளில் குளிப்பாட்டுதல் அவசியமாகும். தென்னங்கீற்றுகள், பனை ஓலைகள், ஈரமான சாக்கு துணிகள், மின்விசிறி, நீர் தெளிப்பான்களை கொண்டு மாடுகளை அடைக்கும் கொட்டகையின் வெப்ப தாக்கத்தை குறைக்கலாம்.குளிர்ந்த குடிநீரில் தாது உப்பு, வைட்டமின் டானிக் கலந்து 3 முறை கால்நடைகளுக்கு கொடுத்தல் அவசியமாகும், மடிவீக்க நோய், பிறகிருமி தொற்று தடுக்க பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலால் மாட்டின் மடியை கழுவி தூய்மை படுத்த வேண்டும்.நார்சத்து நிறைந்த தீவனங்களை சிறு துண்டுகளாக நறுக்கி ஊட்ட வேண்டும். வெப்ப அயற்சி நோயால் கோழிகள் திடீர் இறப்புக்குள்ளாவதை தவிர்க்க வைட்டமின் சி நுண்ணூட்டம் நிறைந்த தண்ணீரை கொடுக்க வேண்டும். இந்த கோடையில் பசுவினங்களுக்கான கோமாரி, தோல் கழலை, ஆடுகளுக்கான ஆட்டுக்கொல்லி, உண்ணி காய்ச்சல் நோய் அறிகுறிகள் கண்டறிந்தால் கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்தல் அவசியமாகும்.மேலும் விபரங்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குரை நேரிலும், 94450 01114 லும், துணை இயக்குர் 94450 32520, உதவி இயக்குனர் 94450 32608 , பழநி, கொடைக்கானலை சேர்ந்த கால்நடை விவசாயிகள் 94450 32585, 94450 01208, 94450 32595 என்ற லும் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என தெரிவிக்க பட்டுள்ளது.