உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அடிப்படை வசதிக்காக ஏங்கும் அய்யலுார் மக்கள்

அடிப்படை வசதிக்காக ஏங்கும் அய்யலுார் மக்கள்

வடமதுரை, : வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு, தெரு, மயானம் போன்றவற்றிற்கு முறையான பாதை வசதியின்மை, அடைப்பட்ட சாக்கடைகள், குறுகி போன தெருக்கள் என அடிப்படை வசதி குறைபாடுகளால் அய்யலுார் பேரூராட்சி மக்கள் அவதிப்படுகின்றனர்.முத்துநாயக்கன்பட்டி அப்பிநாயக்கன்பட்டி ரோட்டில் இருந்து சவரிபட்டி வழியே காக்காயன்குளத்துபட்டி அங்கன்வாடி மையம் வரை தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து முறையான பாதை வசதியின்றி குளத்தின் வழியே காக்காயன்குளத்துபட்டி தெருக்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இங்குள்ள சில மின்கம்பங்கள் துார்ந்துபோய் விபத்து அபாயத்துடன் இருப்பதால் அச்சம் உள்ளது. பொது குடிநீர் குழாய் எண்ணிக்கை அதிகரிக்கப்படாததால் சிரமம் உள்ளது. சித்தனாதன் ஊருணி புதர் மண்டி கிடப்பதால் இதிலிருந்து வரும் விஷ பூச்சிகள் அருகிலுள்ள துவக்க பள்ளி வளாகத்திற்குள் அடிக்கடி வருகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றி துார் வார வேண்டும். நைனான் குளத்துப்பட்டி தெருக்களில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால் பல வகையிலும் சிரமம் உள்ளது. இப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

மின்கம்பங்களை மாற்றுங்க

என்.முருகேசன், ஒன்றிய பிரதிநிதி, தமிழர் தேசம் கட்சி, காக்காயன் குளத்துப்பட்டி:முறையான பாதை வசதியின்றி தனியார் பட்டா குளத்தையே பாதையாக பயன்படுத்தி வருகிறோம். சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும். பொது குடிநீர் குழாய்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அடிக்கடி பொதுமக்களுக்குள் தகராறு ஏற்படுகிறது. இங்கு கூடுதலாக தெருக்குழாய் அமைத்து தர வேண்டும். பல இடங்களில் அடிபம்புகள் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கின்றன. ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

-நுாலகம் இல்லாததால் அவதி

என்.கருப்பன், கூலித்தொழிலாளி, நைனான் குளத்துப்பட்டி: நைனான் குளத்துப்பட்டியில் தெரு ஆக்கிரமிப்புகளை அகற்றி சிமென்ட் ரோடு அமைக்க வேண்டும். குளத்துப்பட்டி மக்களுக்கான மயானத்திற்கு செல்லும் வழியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைப்பு பணி செய்ய வேண்டும். சித்தனாதன் ஊருணியை துார் வார வேண்டும். மண் மேவி மூடி கிடக்கும் சாக்கடைகளை சுத்தம் செய்து மழை நீர் தங்கு தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி பகுதியில் நுாலகம் இல்லாததால் மாணவர்கள் போட்டி தேர்வு எழுத தயாராவதில் பாதிக்கின்றனர் .

-ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க

என்.வினோத்குமார், ஒன்றிய இளைஞரணி தலைவர், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம், குளத்துப்பட்டி: குளத்துப்பட்டி களத்துவீடுகளுக்கு செல்லும் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பால் குறுகி 3 அடி அகலத்தில் உள்ளது. அவசர காலங்களில் ஆட்டோ போன்ற சிறுரக வாகனங்கள் கூட செல்ல முடியாமல் உள்ளது. மூக்கரபிள்ளையார் கோயில் ரோட்டை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த ரோட்டில் மோர்பட்டி ஊராட்சி பகுதியில் இருக்கும் பள்ளங்களை சீரமைக்க வேண்டும். மயான பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

ஆர்.கருப்பன், பேரூராட்சித் தலைவர் (தி.மு.க.,), அய்யலுார்: கிடைக்கும் நிதி ஆதாரங்களை கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் முக்கியத்துவம் கொண்ட பணிகளை தேர்வு செய்கிறோம். குளத்துபட்டி, நைனான்குளத்துபட்டியில் தார் ரோடு புதுப்பித்தல், ஆழ்துளை கிணறுடன் குடிநீர் தொட்டி அமைத்தல், குளத்துபட்டி முதல் தெருவில் பேவர் பிளாக் பதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன். பிற துறைகள் சார்ந்த பிரச்னைகளை அத்துறை கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்