சேதமான இணைப்பு சாலை; ஓடையில் இல்லை பாலம்; வசதிக்காக ஏங்கும் கணக்கன்பட்டி ஊராட்சி மக்கள்
ஆயக்குடி : பழநி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கணக்கன்பட்டி ஊராட்சியில் கோம்பைபட்டி - -ராம பட்டினம் புதுார் இணைப்பு சாலை சேதமடைந்து ஆண்டுகள் ஆகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதோடு நல்லதங்காள் ஓடையில் பாலம் இல்லாததால் மழை காலங்களில் மக்கள் பாதிக்கும் நிலையும் தொடர்கிறது .கணக்கம்பட்டி, கொம்பைபட்டி, பொட்டம்பட்டி, ராஜபுரம்புதுார் கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் கோம்பைப்பட்டிக்கு காலை ஒரு முறை மாலை ஒரு முறை மட்டுமே அரசு பஸ் வந்து செல்கிறது. அனைத்து பகுதிகளிலும் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்ட நிலையில் சில இடங்களில் அமைக்கப்படாமல் உள்ளது. இங்குள்ள விவசாய நிலங்களில் யானை தொல்லை உள்ளது. கணக்கம்பட்டில் குப்பை கொட்ட தனி இடம் இல்லை என்பது பெரும் குறைபாடாக உள்ளது. பள்ளி சிறார்கள் அவதி
நாகராஜன், விவசாயி : விவசாய பெருமக்கள் அதிக அளவில் வாகனங்களை பயன்படுத்துகின்றனர். பஸ் வசதியும் குறைவாக உள்ளதால் பள்ளி சிறார்கள் , பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பஸ் வசதியை அதிகரித்து தர வேண்டும். பாதியில் நிற்கும் சாலை பணி
கோட்டையன், கூலிதொழிலாளி : பெரும்பாலும் அனைத்து சாலைகளிலும் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ள சாலை பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து சாலையை முழுமையாக அமைக்க வேண்டும். தேவை பாலம்
கண்ணுத்துரை, விவசாயி: கோம்பை பட்டியில் இருந்து ராமபட்டினம் புதுார் செல்லும் இணைப்புச் சாலை முழுமையாக சேதம் அடைந்துள்ளது . இப்பாதையின் இடையே நல்லதங்காள் ஓடை உள்ளது ஓடை பகுதியில் பாலம் வசதி இல்லாததால் ஆதிதிராவிடர் சுடுகாட்டிற்கு செல்ல மழைக்காலங்களில் மிகவும் சிரமப்படும் சூழல் உள்ளது. சாலைகள் சேதம்
செந்திலரசு, விவசாயி : விவசாய நிலத்திற்கு செல்லும் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. ராம பட்டினம் புதுார் கோம்பைபட்டி இணைப்பு சாலையில் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல வசதியாக இச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிதிராவிடர் சுடுகாட்டுப் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். பாதிக்காத வகையில் பஸ் இயக்கம்
ராமலட்சுமி, துணைத் தலைவர்: பல்வேறு இடங்களில் சிமென்ட் சாலைகள் தரமாக அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தெருவிளக்குகள் உடனுக்குடன் அமைக்கப்படுகிறது. ராமபட்டினம் புதுார்- கோம்பைபட்டி இணைப்பு சாலை திட்ட மதிப்பீடு அதிக அளவில் உள்ளது. அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் விவசாயிகள் பயன்படுத்துவதால் பஸ்சில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறி உள்ளனர். இருப்பினும் பள்ளி குழந்தைகள் பாதிக்காத வகையில் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. ரூ.2 கோடியில் பணிகள்
பொன்னுத்தாய் , தலைவர்: இதுவரை ரூ.2 கோடிக்கு மேல் திட்டப்பணிகள் நடந்துள்ளது. மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது. ரேஷன் கடைகள் அமைக்கப்பட உள்ளன. கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பலருக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து சாலைகளும் சிமென்ட் சாலைகளாக மாற்றி அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விடுபட்ட சாலைகள் விரைவில் அமைக்கப்படும் என்றார்.