உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 904 பயனாளிக்கு ரூ.12.42 கோடியில் மானியம் வழங்கல்

904 பயனாளிக்கு ரூ.12.42 கோடியில் மானியம் வழங்கல்

திண்டுக்கல்: தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் 904 பயனாளிகளுக்கு ரூ.12.42 கோடி மானியம் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக,'' தாட்கோ மாவட்ட மேலாளர் முகைதீன் அப்துல்காதர் தெரிவித்தார்.

தாட்கோ துறையின்நோக்கம்

தாட்கோ எனும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் பட்டியலிடப்பட்ட ஆதிதிராவிடர் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, சிறப்பு மத்திய ,மாநில நிதி உதவியுடன் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நன்னிலம் மகளிர் நில உடைமைத்திட்டம், சி.எம்., அரைஸ், பி.எம்., அஜய், கல்விக்கடன் திட்டம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

நிலம் வாங்கும் திட்டம் குறித்து

நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வயது வரம்பு 18 முதல் 55க்குள் இருக்க வேண்டும். மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பெயரில் நிலம் ஏதும் இருக்கக்கூடாது. நிலம் விற்பவர் பி.சி, எம்.பி.சி., சீர்மரபினர் வகுப்பை சார்ந்தவராக இருக்க வேண்டும். தாட்கோ மானியம் திட்டத்தொகையில் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். நிலத்திற்கான பத்திர பதிவு செலவினம் தாட்கோ மூலம் செய்து தரப்படும்.

பிரதான் மந்திரி அஜய் திட்டத்தின் பயன்கள்

பி.எம்., அஜய் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வயது வரம்பு 18 முதல் 55க்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பிப்பவர்களுக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் ,அதிகபட்சம் ரூ.50 ஆயிரம். இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். கால்நடை வளர்ப்பு , பிற தொழில்களுக்கு திட்டத்தொகை ரூ.1.50 லட்சத்திற்குள் இருக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். https://newscheme.tahdco.comஎனும் தாட்கோ இணையதள முகவரியில் PM-AJAY திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சி.எம்., அரைஸ் திட்டம் பற்றி

முதல்வரின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் படி விண்ணப்பம் செய்பவர்களுக்கு திட்டத்தொகையில் மானியம் 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3,5 லட்சம் வரை வழங்கப்படும். மொத்த திட்டத்தொகை ரூ.2 லட்சத்திற்கு மேல் ரூ.10. லட்சத்திற்குள் இருக்கும் தொழில்களுக்கு இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். https://newscheme.tahdco.comஎனும் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

கல்விக்கடன், திறன் மேம்பாட்டு பயிற்சி செயல்பாடு

ஆதிதிராவிடர் ,பழங்குடியின மாணவர்கள் தங்களது கல்வி முன்னேற்றத்தை உயர்த்துவதற்கு, மேல்படிப்பிற்கான கல்வித்தொகை தாட்கோ மூலம் கல்விக்கடனாக வழங்கப்பட்டு வருகிறது. படித்த மாணவர்கள் தங்களின் திறனை மேம்படுத்திக்கொள்ளவும், வேலைவாய்ப்புடன் அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனங்கள் மூலம் திறன்மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

துறையின் மூலம் செய்து கொடுக்கப்பட்டவை

தாட்கோ மூலம் 2021 முதல் 2025 நடப்பு மாதம் வரை தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் 904 பயனாளிகளுக்கு ரூ.12.42 கோடி மானியம் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை