தட்கல் திட்டத்தில் பணம் செலுத்தியும் மின் இணைப்பு வழங்காததால் தவிப்பு
குஜிலியம்பாறை: விவசாய மின் இணைப்பு பெற தட்கல் திட்டத்தின் கீழ் டெபாசிட் செலுத்தி உடனடி மின் இணைப்பு பெற பணம் செலுத்திய விவசாயிகளுக்கு இணைப்பு வழங்காமல் காலம் கடத்துவதால் கட்டிய பணம் என்ன ஆகுமோ என புலம்பி தவிக்கின்றனர்.விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பைப் பெற விவசாயிகள் பதிவு செய்து ஆண்டுக்கணக்கில் காத்திருப்பதால் தமிழக அரசு உடனடியாக மின் இணைப்பை பெற மாற்றுத் திட்டம் ஒன்றை அறிவித்தது. சுய உதவி மின் திட்டம் ( தட்கல் ) என்ற பெயரில் உடனடியாக மின் இணைப்பு வேண்டுவோர் ரூ.2.50 லட்சம் டெபாசிட் செலுத்தினால் 5 ஹெச்.பி., மின் இணைப்பும், ரூ. 3.00 லட்சம் செலுத்தினால் 10 ஹெச்.பி., மின் இணைப்பும் வழங்குவதாக அரசு அறிவித்தது.இதை தொடர்ந்து பலரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து டெபாசிட் தொகையை செலுத்தினர். ஆனால் அறிவித்தபடி இணைப்பு கிடைக்கவில்லை. கேட்டால் இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என்கின்றனர். அதன்படி ஆன்லைன் சேவையும் லாக் செய்யப்பட்டுள்ளதுஇப்படி இருக்கும் பட்சத்தில் பணம் செலுத்திய விவசாயிகளுக்காவது மின் இணைப்பு கொடுக்க வேண்டாமா என கொதிக்கின்றனர் விவசாயிகள்.முன்னாள் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.ராஜரத்தினம் கூறுகையில்,''எனது நிலத்திற்கு மின் இணைப்பு கேட்டு தட்கல் திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் டெபாசிட் செலுத்தினேன். டெபாசிட் செலுத்தி ஒராண்டு முடியப்போகிறது. இன்னும் மின் இணைப்பு கொடுப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. பணம் செலுத்தியோர் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இவர்களுக்கு முறையான மின் இணைப்பை உடனடியாக வழங்க வேண்டும் ''என்றார்.