உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அசுத்தம்... அச்சம்... அபாயம்... பரிதவிக்கும் அருணாநகர் குடியிருப்போர்

அசுத்தம்... அச்சம்... அபாயம்... பரிதவிக்கும் அருணாநகர் குடியிருப்போர்

திண்டுக்கல்: துாய்மை பணியாளர்கள் வருகையின்மையால் அசுத்தம், தெருநாய்கள் தொல்லையால் அச்சம்,ஆண்டுகள் பல கடந்தும் போடப்படாத ரோடுகளால் அபாயம், கேள்விக்குறியான சாக்கடை, குப்பைகளால் புகை மண்டலம், பொழுதுபோக்கு அம்சமற்ற நிலை, வாகனங்களால் ஆக்கிரமிப்பு என பல இடர்பாடுகளில் சிக்கி தவிக்கின்றனர் திண்டுக்கல் அருணாநகர் குடியிருப்புவாசிகள்.திண்டுக்கல் திருச்சி ரோடு என்.ஜி.ஓ.காலனியில் உள்ள தெற்கு ரெங்கநாதபுரம் அருணாநகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பொன்னையா, செயற்குழு உறுப்பினர்கள் பாண்டி, ஐயாசாமி, தண்டபாணி, வடிவேல், ராஜன், பாலாஜி கூறியதாவது : துாய்மை பணியாளர்கள் வருகை என்பது அறவே இல்லாமல் உள்ளது.மாதத்திற்கு ஒருமுறை கூட குப்பை சேகரிக்க பணியாளர்கள் வராததால் என்.ஜி.ஓ.காலனி உழவர் சந்தை ரோட்டில் குப்பை குவிக்கப்படுகிறது. இவ்வாறு குவிக்கப்பட்ட குப்பையை மர்மநபர்கள் தீயிட்டு கொளுத்துவதால் அந்த பகுதி முழுவதுமாக எந்த நேரமும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அதன் அருகிலே டிரான்ஸ்பார்மர் உள்ளதால் பெரும் விபத்து நிகழும் சூழல் உள்ளது. விபத்து ஏற்படும் முன் குப்பையை அகற்றி வீடுகளில் குப்பையை சேகரிக்க பணியாளர்களை நிர்பந்திக்க வேண்டும். ரோடுகள் போடப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாவதால் குண்டும், குழியுமான பாதையில்தினமும் பயணிக்க வேண்டி உள்ளது. இதனால் முதுகு வலி உட்பட நோய்களுடன் வாகன பழுதும் அடிக்கடி ஏற்படுகிறது. சேதமான ரோட்டில் கற்கள் பெயர்ந்து வழியெங்கும் கிடக்கிறது. இந்தவழிப்பாதையானது என்.ஜி.ஓ.காலனி உழவர் சந்தைக்கு செல்லும் முக்கிய வழியாகையால் பாதசாரிகளான குடும்ப தலைவிகள் பயத்துடனே நடைபயணத்தை தொடர்கின்றனர். குடிநீர் பிரச்னையானது மற்றபகுதிகளை விடவும் பெரும் சோதனையாகவே உள்ளது. பத்துநாட்களுக்கு ஒருமுறை வரும் குறைந்த அளவிலான குடிநீர் சப்ளையால் வாழ்வை நகர்த்துவதே பெரும் சவாலாக உள்ளது. குடிநீர் சப்ளையை அருகிலுள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட ஏரியாக்கள் போல் மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அறிவிக்கப்படாத மின்தடை தொடர்வதால் கோடை விடுமுறை நேரத்தில் குழந்தைகள் மிகவும்அல்லல்படுகின்றனர். மின் இணைப்பை சீராக வழங்க வேண்டும். பூங்கா வசதி, நுாலக வசதி உட்பட பொழுதுபோக்கு அம்சமின்றி இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தில் வாழ்வை நகர்த்தி வருகின்றனர். சிறுவர்கள் பள்ளமான ரோட்டில் விளையாடுவது பரிதாபமாக உள்ளது. சாக்கடை வசதி என்பதே அறவே இல்லாத பகுதியாக எங்கள் வசிப்பிடம் உள்ளது. இதனால் கழிவுநீர் தேக்கமானது வீட்டிற்கு வீடு தேங்கியுள்ளது. பாலகிருஷ்ணாபுரம் கிளை நுாலக வாசலில் உள்ள சாக்கடை நடுவில் மின்கம்பம் நடப்பட்டுள்ளதை இதன் உதாரணமாக காட்டலாம். என்.ஜி.ஓ.காலனி வழியில் குறைந்த மின்விளக்குகளே உள்ளதால் இரவில் சமூக விரோத செயல்கள்அரங்கேறுகிறது. கூடுதல் மின்விளக்கு அமைத்து போலீசார் கட்டுப்பாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும். தெருநாய்களின் தொல்லையால் டூவீலர்களில் செல்ல அச்சம் நிலவுகிறது. தெருநாய்கள் டூவீலர்களை விரட்டி வருவதால் விபத்து அபாயம் பெருகியுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த பாலகிருஷணாபுரம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பலர் தங்கள் வீட்டிற்கு முன் கார்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்வதால் குறுகலான சந்தின் பாதையில்மேலும் இடையூறு ஏற்பட்டுள்ளது.ஏழரை ஆண்டுகளாக நடந்து வந்த சிலுவத்துார் மேம்பால பணி நிறைவடைந்தும் சுரங்க வழிப்பாதையைநடைமுறைக்கு கொண்டு வராமல் தாமதப்படுத்துவதால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமமடைந்துள்ளனர். சுரங்க வழிப்பாதை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட மேம்பாட்டு நிதியில் இருந்து எவ்வித நலத்திட்டமும் எங்கள் பகுதிக்கு இதுவரை செலவிடப்படவில்லை என்பதை யாராவது அதிகாரிகள் ஒருமுறை வருகை புரிந்தால் உணர்வர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை