| ADDED : ஜூலை 22, 2024 05:44 AM
கன்னிவாடி: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள்,வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது. திரவிய அபிஷேகம், திருமஞ்சனம் சாற்றுதலுடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வாலை, திரிபுரை சக்தி அம்மனுக்கு, மகா தீபாராதனை நடந்தது.ஸ்ரீராமபுரம் ராமலிங்கம்பட்டியில் பாதாள செம்பு முருகன் கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் ஜலகண்டேஸ்வரர், விநாயகர், பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு ஆராதனைகள் நடந்தது. கோயில் நுழைவாயிலில் உள்ள 18 அடி உயர கருப்பணசாமிக்கு, 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. தர்மத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் காரமடை ராமலிங்க சுவாமி கோயில், தோணிமலை மலையாண்டி முருகன் கோயில் செம்பட்டி அருகே அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், பவுர்ணமி ஆராதனைகள் நடந்தது.--பழநி ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயிலுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை, நடந்தது. மானுார் சுவாமிகள், அடிவாரம் குருசாமி கோயிலில் தீபாராதனை நடந்தது. பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் மதுரை திருப்புகழ் சபை சார்பில் திருப்புகழ் வாசிக்கப்பட்டது. பெரியநாயகி அம்மன் கோயில் முற்றோதல் குழுவினர் சார்பாக திருவாசகம் வாசிக்கப்பட்டது.