கோடையில் முளைக்கும் ஜூஸ் கடைகள்
திண்டுக்கல் : கோடை காலம் தொடங்கியதால் திண்டுக்கல் மாவட்ட ரோட்டோரங்களில் புதிதாக தோன்றிய ஜூஸ் கடைகளில் அதிகளவு செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கண்காணிக்க வேண்டிய உணவுத்துறை அதிகாரிகள் துாக்கத்தில் உள்ளனர்.கோடை காலம் தொடங்கியதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து அடிக்கடி நீராதாரங்கள் குடிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதற்காக ஒருசிலர் வீட்டிலிருந்தே ஜூஸ், தண்ணீரை பாட்டில்களில் நிரப்பி எடுத்து வருகின்றனர். மற்றவர்கள் ரோட்டோரங்களில் விற்பனை செய்யப்படும் ஜூஸ் கடைகளில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களை வாங்கி குடிக்கின்றனர். இதனால் வெளியூர், கிராமங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் ரோட்டோரங்களில் புதிதாக இளநீர், சர்பத் போன்ற குளிர்பானங்களை விற்பனை செய்யும் ஜூஸ் கடைகளை திறக்கின்றனர். இவர்கள் தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் ரோட்டோரங்களில் திறந்தவெளியில் இருப்பதால் மணல் துகள்கள், துாசிகள் படிந்து சுகாதாரமில்லாமல் உள்ளது.இதோடு அதிகளவில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கும் நிலையும் உள்ளது. இதை வாங்கி குடிக்கும் வாகன ஓட்டிகள், மக்கள் சிறுது நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதியாகும் நிலை தொடர்கிறது. இப்பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை எங்கும் பார்க்க முடியாத நிலை உள்ளது. அலுவலகத்திற்கு மக்கள் சென்று புகாரளிக்க சென்றாலும் உயர் அதிகாரி இல்லை என அழைக்கழிப்பு நிலையும் தொடர்கிறது. துாக்கத்தில் உள்ள உணவுத்துறை அதிகாரிகள் ரோட்டோரங்களில் புதிதாக முளைத்திருக்கும் ஜூஸ் கடைகளில் ஆய்வு செய்து தவறுகள் இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.