உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அதிவேக பயணத்தால் மோதிய தனியார் பஸ்கள்; பயணிகள் காயம்

அதிவேக பயணத்தால் மோதிய தனியார் பஸ்கள்; பயணிகள் காயம்

சின்னாளபட்டி: மேலக்கோட்டை அருகே கட்டுப்பாடற்ற வேகத்தில் இயங்கிய இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 15க்கு மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.திண்டுக்கல், வத்தலகுண்டு, செம்பட்டி, நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து சின்னாளபட்டி வழியே அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பெரும்பாலான தனியார் பஸ்கள், சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து புறப்படும் போது தாமதப்படுத்துவதுடன் உரிய நேரத்தில் இயக்கப்படுவது இல்லை. வழித்தடத்தில் உள்ள பிற இடங்களில் நேரத்தை ஈடு செய்வதற்காக கூடுதலான வேகத்தில் இயக்கப்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. போலீசாரும் அரசியல் செல்வாக்கு காரணமாக அதிவேக பயணங்களை கண்டு கொள்வதில்லை. இப்பிரச்னைகளால் அவ்வப்போது விபத்துகளும் தொடர்கிறது.நேற்று திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டை நோக்கி புறப்பட்ட தனியார் பஸ் சின்னாளபட்டி அடுத்த மேலக்கோட்டை அருகே சென்றபோது வத்தலகுண்டில் இருந்து சின்னாளபட்டிக்கு எதிரே வந்த தனியார் பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.இரு பஸ்களிலும் இருந்த ராஜா 31, பொன்னம்மாள் 42, கதிர்வேல் 36 உட்பட 15க்கு மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். சின்னாளபட்டி போலீசார காயமடைந்த பயணிகளை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.சின்னாளபட்டி வழியே இயங்கும் தனியார் பஸ்களின் நேர மேலாண்மை, அதிவேக பயணம் உள்ளிட்ட பிரச்னைகளால் அப்பாவி பயணிகள் பாதிக்கப்படும் அவலம் தொடர்கிறது. இதனை கட்டுப்படுத்த போலீஸ், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை