உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரேஷன் கடையில் எலி தொல்லை; மது பாராக மாறும் சந்துகள் பழநி 13 வது வார்டு மக்கள் அவதி

ரேஷன் கடையில் எலி தொல்லை; மது பாராக மாறும் சந்துகள் பழநி 13 வது வார்டு மக்கள் அவதி

பழநி: எலி தொல்லையால் வீணாகும் ரேஷன் பொருட்கள் , மது பாராக மாறும் சந்துக்கள் என பழநி நகராட்சி 13 வது வார்டு மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர்.கணபதி ரோடு, ஜீவானந்தரோடு, விவேகானந்தர் ரோடு, என்.டி ரோடு, கான்வென்ட் ரோடு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் காலை,மாலை நேரங்களில் புது தாராபுரம் ரோடு பகுதியில் ரயில்வே கேட் அடைக்கப்படும் போது போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. நகரின் முக்கிய சாலையை இணைக்கும் பகுதியில் பள்ளிக்கூடம், அங்கன்வாடி மையம் உள்ளன. இங்கு அதிக வேகத்தில் வாகனங்கள் வருவதால் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. ரேஷன் கடை தரைத்தளத்தில் எலிகள் துளையிட்டு ரேஷன் பொருட்களை வீணாக்குகின்றன. அரிசியில் எலியின் கழிவுகள் கலந்து பொதுமக்களுக்கு விநியோகிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகிறார்கள்.

டூவீலர்களால் விபத்து

பால்ராஜ், ஆட்டோ உரிமையாளர் :பள்ளிக்கூடம் உள்ள என்.டி .சாலை, புது தாராபுரம் ரோடு இணைப்பு பகுதியில் டூவீலரில் அதிக வேகத்தில் இளைஞர்கள் வருகின்றனர். இதனால் பள்ளி குழந்தைகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இங்குள்ள சாக்கடை சேதமடைந்துள்ளதால் இதை புதிதாக கட்டமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இல்லவே இல்லை கேமரா

மகாலிங்கம், முடி திருத்தும் பணியாளர் : சந்துகளில் மது அருந்தும் நபர்கள் இரவு நேரத்தில் அமர்ந்துள்ளனர். இதனால் பெண்கள் நடந்து வர அச்சப்படுகின்றனர். போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். ஜிகா குடிநீர் பைப் லைன் இணைப்பு வீடுகளுக்கு வழங்கவில்லை. கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்துவதோடு அங்கன்வாடி மையத்தை சரி செய்ய வேண்டும்.

நாய்களால் மன உளைச்சல்

மகுடீஸ்வரன், பேக்கரி உரிமையாளர் : நாய் தொல்லை அதிகம் உள்ளது. இரவு நேரங்களில் தெருகளில் நடமாட முடியாது .அதே போல் இரவு நேரங்களில் நாய்கள் குரைத்து தொல்லை செய்வதால் தூங்க முடியல . இதனால் மன உளைச்சல் ஏற்படுகிறது. புது தாராபுரம் ரோடு இணைப்பு பகுதிகளில் வாகன விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடைகள் சரி செய்ய வேண்டும்.

சீரமை க் க நட வ டிக்கை

பார்வதி, கவுன்சிலர்(தி.மு.க.,) : ரேஷன் கடை தரைத்தளம் சேதமடைத்துள்ளது. எலி தொல்லை இருப்பதால் அருகில் இருக்கும் மற்றொரு கடைக்கு பொருட்களை மாற்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. விரைவில் ரேஷன் கடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அங்கன்வாடி மையம் சீரமைக்க நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சாக்கடை விரைவில் சரி செய்யப்பட உள்ளது. போதை ஆசாமிகளை கண்காணித்து போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ