உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தரமற்ற ரோடு பணி; கேள்விக்குறியாகும் வசதிகள்: பரிதவிப்பில் அந்தோணியார் நகர் குடியிருப்போர்

தரமற்ற ரோடு பணி; கேள்விக்குறியாகும் வசதிகள்: பரிதவிப்பில் அந்தோணியார் நகர் குடியிருப்போர்

திண்டுக்கல் : தெருநாய்கள் தொல்லை, மின்விளக்கு, சாக்கடை வசதியின்மை, தரமற்ற ரோடுகளால் விபத்துக்கள் என்பன போன்ற பிரச்னைகளை கொண்டு கொள்ளாத உள்ளாட்சி அதிகாரிகளால் திண்டுக்கல் அந்தோணியார் நகர் குடியிருப்போர் இன்னல்களை சந்திக்கின்றனர்.திண்டுக்கல் அடியனுாத்து ஊராட்சிக்குட்பட்ட மருத்துவ கல்லுாரி ரோட்டிலுள்ள அந்தோணியார் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் வேளாகண்ணி, சந்தியாவு, விசுவாசம், லாசர் கூறியதாவது: அரசு மருத்துவ கல்லுாரி ரோடான எங்கள் பகுதி ரோடு வசதியின்றி குண்டும் குழியுமாக உள்ளது.நல்லாம்பட்டி பிரிவில் ரோட்டின் குறுக்கே சாக்கடை கழிவுநீர் பாய்வதால் சுகாதாரக்கேடு உள்ளது.லெம்பை குளம் முதல் யாகப்பன்பட்டி வரை தெரு அமைந்துள்ள பகுதிகளில் தெருவிளக்கின்றி உள்ளதால் இரவில் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் உள்ளதை போன்று எங்கள் பகுதியிலும் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும் தலைவலி பிரச்னையாக விளங்கும் குப்பை அகற்றுதலில் எங்கள் பகுதி பின்தங்கிய நிலையிலே உள்ளது. இதனால் தெருமுனை வரை ஆங்காங்கே குப்பை குவிந்து கிடக்கிறது.

கருவேலங்களால் அலங்கோலம்

குறிப்பாக வேடபட்டி முதல் யாகப்பன்பட்டி வரை ரோட்டில் இருபுறமும் குப்பை குவிக்கப்பட்டு உள்ளது. இதை அகற்ற வேண்டும். கடுமையான வறட்சி நிலவும் இந்த நிலையில் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நிலத்தடி நீருக்கான ஆதாரமாகவிளங்கும் லெம்பை குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும். குளமெங்கும் கருவேலம் முட்கள் வளர்ந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. கண்காணிப்பு கேமராவுடன் நடைபயிற்சி மையம், பூங்கா அமைத்தால் எங்கள் பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ரோடு என்ற பெயரில் கலவை மண், சல்லி கற்களான மெட்டல் பாதைகளை அமைத்து உள்ளதால் தரமற்ற நிலையில் உள்ளது. வாகன பாகங்கள் பழுதுபட்டு விபத்து நடப்பது தவிர்க்க முடியாததாகிறது. இப்பிரச்னையிலிருந்து விடுபட தார் ரோடு அமைக்க வேண்டும். சிறிய மழைக்கும் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் செம்மண் கரைந்து ஓடுவதால் நாளடைவில் ரோடு போட்டும் பயனில்லாமல் உள்ளது. எங்கள் பகுதியின் முக்கிய பிரச்னையாக சாக்கடை உள்ளது. வீட்டிற்கு வீடு வாசலில் பள்ளம் தோண்டி கழிவுநீரை வேறுவழியின்றி விடுவதால் கொசு உற்பத்தியாகிறது. இதனால் பலவித தொற்றுகள் பரவி மக்களை வதைக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ