| ADDED : மே 28, 2024 03:49 AM
திண்டுக்கல், : திண்டுக்கல் நகரில் செயல்படும் உயர்தர தனியார் ஓட்டல்களில் உள்ள நீச்சல் தொட்டிகள் முறையான உரிமம் பெறப்பட்டுள்ளதா,பராமரிக்கப்படுகிறதா என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் நகரில் செயல்படும் உயர்தர தனியார் ஹோட்டல்களில் நீச்சல் தொட்டிகள் உள்ளன. இவைகளில் விடுமுறை நாட்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டணம் பெற்று குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் பயிற்சியாளர்களை கொண்டு நீச்சல் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இதுபோன்ற நீச்சல் தொட்டிகளில் குழந்தைகள் அதிகளவில் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. அதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் நகரில் நீச்சல் தொட்டிகளுடன் செயல்படும் உயர்தர ஹோட்டல்களில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள், பராமரிப்பு, முறையான உரிமம் உள்ளதா என ஆய்வு செய்ய மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் நகரமைப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று திண்டுக்கல் மாநகராட்சி நகரமைப்பு திட்டமிடுநர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் பழநி ரோடு, மெங்கில்ஸ்ரோடு உள்ளிட்ட நகரில் பல்வேறு பகுதிகளில் செயல்படும் உயர்தர தனியார் ஓட்டல்களில் பயன்பாட்டிலிருக்கும் நீச்சல் தொட்டிகள் முறையாக உரிமம் பெறப்பட்டுள்ளதா, பராமரிக்கப்படுகிறதா, குழந்தைகள் பாதுகாப்பான முறையில் அனுமதிக்கப்படுகிறார்களா என ஆய்வு செய்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து அனுமதி பெறாமல் நீச்சல் தொட்டிகளை அமைத்து பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.