உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மனதை ஒருநிலைபடுத்தும் மனவளக்கலை

மனதை ஒருநிலைபடுத்தும் மனவளக்கலை

திண்டுக்கல் யோகா என்பது ஆழ்கடல் போல் மனிதர்களின் மனதை அமைதியடைய செய்யும் ஒரு உன்னதமான பயிற்சியாகும். இது மனதை ஒருநிலைப்படுத்தி, சீர்மைப்படுத்தி, கூர்மைப்படுத்துகின்ற எளியமுறை தியானம். நோய் வராமல் காக்கின்ற மனவளக்கலையை வேதாத்திரி மகரிஷி எளியமுறை உடற்பயிற்சி மூலம் சமூகத்திற்கு கற்பித்துள்ளார். இக்கலை உலகில் 24 நாடுகளில் உள்ளது. இதை கற்றுகொடுக்க உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் பட்டிவீரன்பட்டியில் 217-வது அறிவுத்திருக்கோயில் திறக்கப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் மனம் திறந்ததாவது...

ஆன்மாவை பற்றிய உணர்வு

மயிலானந்தன், தலைவர், உலக சமுதாய சேவா சங்கம்: ஆன்மிகம் என்பது ஆன்மாவைப் பற்றிய அறிவை உணர்ந்து கொள்வது. துன்பம் வரும்போது மட்டுமே மனிதன் இறைவனை நினைக்கிறான். நான் யார் என்பதை அறிந்து கொள்ள உதவுவதே மகான்களின் தத்துவங்கள்.பாரத தேசத்தில் பிறந்த மகான்கள் மட்டுமே யோகா, தியானம், உடற்பயிற்சி, இறைநிலை உணர்தல் போன்ற தத்துவங்களை நமக்கு அளித்துச் சென்றனர். அதுபோன்ற தத்துவங்களை எளிய முறையில் உணர்ந்து கொள்ள நமக்கு வழிகாட்டி சென்றவர் வேதாத்திரி மகரிஷி. மனவளக்கலைப் பயிற்சியானது உடல், உயிர். மனம் போன்றவற்றைத் துாய்மைப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் நமக்கு உதவுகிறது.

ஒழுக்கமுடன் வாழ வேண்டும்

தாமோதரன், தலைவர், திண்டுக்கல் மண்டலம்: கல்வியின் நோக்கம் ஒழுக்கமுடன் வாழ்வது. மனிதன் ஒழுக்கமுடன் வாழ நல்ல பண்புகளை வளர்க்க வேண்டும். அதற்கு உதவுவதே மெய்யுணர்வு கல்வி எனும் மனவளக்கலையாகும். வேதாத்திரி மகரிஷி நமக்கு அளித்த மனவளக்கலைப் பயிற்சியானது உடல்நலம், உயிர்வளம், மனநலம், குணநலப் பயிற்சிகளை உள்ளடக்கியது. மனிதன் குண நலன்களை சீரமைக்கும்போது முழுமைப்பேறு அடைய முடியும். மனவளக்கலை தற்கால விஞ்ஞானத்தோடு கூடிய ஒழுக்கநெறி, பண்பாட்டுக்கல்வியை போதிப்பதால் இது எல்லா மனிதர்களுக்கும் ஏற்றதாகும்.

இது ஒரு பயிற்சி களம்

பாண்டியராஜன், நிர்வாக அறங்காவலர், பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியில் 217வது அறிவுத்திருக்கோயில் திறக்கப்பட்டது. இது மனிதன் உடல், உயிர், மனம், அறிவுநலம் பெற பயிற்சி களம் ஆகும். எப்போதெல்லாம் மனிதனுக்கு உடல் நலத்தில் பிரச்னையும், மனநலத்தில் சிக்கலும், வாழ்வில் துன்பமும், கவலையும் வருகின்றதோ அப்போதெல்லாம் அறிவுத்திருக்கோயில் நினைவுக்கு வரவேண்டும். பழகுவதற்கும், தன்னை அறிவதற்கும் சிறந்த இடம் இது ஆகும்.

குடும்பத்துடன் மகிழ்ச்சி

சிவசங்கு, அறங்காவலர், பட்டிவீரன்பட்டி:மனவளக்கலைப் பயிற்சி எடுத்து கொண்ட பிறகு என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்கிறேன். எனக்கு இரவில் படுத்தால் அதிக நேரம் துாக்கம் வராது. என் வாழ்க்கை துணைவிக்கும் முழங்கால் வலி இருந்தது. இந்தப் பயிற்சி எடுத்ததன் பிறகு எனது குடும்பமே மகிழ்ச்சியாக இருப்பதை உணர்கிறோம். எனது குடும்பத்தில் ஏற்பட்ட பெரிய இழப்பினால் ஏற்பட்ட மனவேதனைகள் இதனால் குறைந்தது.

தேர்வில் வெற்றி

உமாராணி, மனவளக்கலை ஆசிரியை, பட்டிவீரன்பட்டி: நான் பள்ளி ஆசிரியையாக பணியாற்றுகிறேன். மன அழுத்தம் காரணமாக ஒருவித பயம் என்னை துரத்தியது. துாக்கம் குறைந்தது. என் தோழியின் அறிவுரைப்படி மனவளக்கலை பயிற்சியில் இணைந்தேன். நான் பெற்ற தெளிவைக்கண்டு குடும்ப உறுப்பினர்களும் பயிற்சியில் இணைந்தனர். என் மகன் போட்டித் தேர்வில் திணறிக் கொண்டு இருந்த காலம். தியானம், மனவோர்மையால் அடுத்து வந்த தேர்வில் வெற்றி கண்டார். எங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை மனவளக்கலை தந்தது. மகிழ்வோடு வாழ்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை