| ADDED : மே 12, 2024 04:16 AM
வேடசந்துார்: திண்டுக்கல் கரூர் நான்கு வழிச்சாலையிலிருந்து வேடசந்துார் செல்ல மேம்பாலம் இல்லாத நிலையில் இதன் வழியில் தடுப்பு வைக்கப்பட்டதால் ஆத்திரப்பட்ட மக்கள் தடுப்பை அகற்றினர்.திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலை இருவழி சாலையாக இருந்த போது வேடசந்துார் நகர் வழியாக சென்றது. நான்கு வழி சாலையாக மாற்றப்பட்ட போது நகரை யொட்டி அமைக்கப்பட்டது.கொன்னாம்பட்டி, தம்மனம்பட்டி, ஒட்டநாகம்பட்டி , தோப்புப்பட்டி உள்ளிட்ட சுற்று பகுதி மக்கள் வேடசந்துார் நகர் பகுதிக்கு வர நான்கு வழி சாலையை கடந்து தான் வர வேண்டும். மேம்பாலமும் அமைக்காததால் ரோட்டின் குறுக்கே கடந்து வருகின்றனர். இதனால் ஏராளமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இங்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டன. ஆத்திரமடைந்த சுற்றுப்பகுதி மக்கள் தடுப்பு கம்பிகளை நேற்று அகற்றினர்.இப்பகுதி மக்கள் கூறியதாவது: மேம்பாலம் இல்லையேல் சிறிய அளவில் சுரங்கபாதையாவது அமைக்க வேண்டும். இது குறித்து எம்.எல்.ஏ., காந்திராஜன், எம்.பி., ஜோதி மணியிடம் மனு அளித்த நிலையில் பாலம் கட்டப்படும் என்றனர். ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. இங்கு முறையான வழி காண துறை நிர்வாகம் முன் வரவேண்டும் என்றனர்.