| ADDED : ஜூன் 23, 2024 04:21 AM
திண்டுக்கல்:''திருநங்கைகள் தங்கள் தேவைகள் குறித்து கோரிக்கை மனு கொடுத்தால் நிறைவேற்றித்தரப்படும்,'' என,கலெக்டர் பூங்கொடி கூறினார்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் அவர் பேசியதாவது: திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. சமூக நலன்,மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கு தொழில் தொடங்க ரூ.50,000 மானியமாக வழங்கப்படுகிறது. 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1500 வழங்கப்படுகிறது. தகுதியானவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா உள்ளவர்களுக்கு இலவச வீடு உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குடும்ப அட்டை கோரி 24, ஆயுஷ்மான் பாரத் அட்டை கோரி 45, வாக்காளர் அடையாள அட்டை கோரி 22, ஆதார் அட்டை கோரி 22, முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு அட்டை கோரி 4, மாநில அடையாள அட்டை கோரி 22, தேசிய அடையாள அட்டை கோரி 13 என 152 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையதளம் வாயிலாக அலுவலர்கள் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. 5 திருநங்கைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்பட்டது. திருநங்கைகள் தேவைகள் குறித்து கோரிக்கை மனு கொடுத்தால் நிறைவேற்றித்தரப்படும் என்றார். மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, தேர்தல் வட்டாட்சியர் சரவணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கமலக்கண்ணன், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா பங்கேற்றனர்.