| ADDED : ஜூன் 02, 2024 04:29 AM
கொடைக்கானல்: கொடைக்கானல் பூண்டி அருங்காட்டு குளத்தில் வாலிபர் பலி தொடர்ந்து அனுமதியின்றி படகு சவாரி நடந்தது அம்பலமாகி உள்ளது. இருந்தும் இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை இல்லாத நிலையே உள்ளது.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூண்டி அருங்காட்டுகுளம் அருகே கொடைக்கானல் சர்வதேச பள்ளிக்கு சொந்தமான இடமும் உள்ளது. அனுமதியின்றி இக்குளத்திற்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவதும், அத்துமீறல்கள் நடப்பது வாடிக்கையாக உள்ளது. தடை போதை காளான், குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக இப்பகுதியில் கிடைப்பதே பயணிகள் வர காரணம் எனத் தெரிய வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சென்னையை சேர்ந்த வாலிபர் குளத்தில் மூழ்கி பலியானதை தொடர்ந்து கண்துடைப்பு நடவடிக்கை தொடர்ந்தது. இந்நிலையில் கொடைக்கானல் சர்வதேச பள்ளிக்கு சொந்தமான இடத்திற்கு அருகில் உள்ள குளத்தில் அனுமதியின்றி படகு இயக்குவது குறித்து சர்ச்சை எழுந்தது. நேற்று முன்தினம் இப்பள்ளியில் பணியாற்றும் மூவர் குளத்தில் படகில் சென்ற போது கொடைக்கானல் பாக்கியபுரத்தை சேர்ந்த ஐசக்அருண்குமார் 36, படகு கவிழ்ந்து பலியானார். பொதுப்பணித்துறை, ஊராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காது மவுனம் காத்ததே தற்போதைய வாலிபர் பலிக்கு காரணமாக உள்ளது.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்குளத்தில் வாரந்தோறும் மாணவர்கள்,விருந்தினர்கள் அனுமதியின்றி ஆபத்தான படகு சவாரி செய்தது சமூக வலைதளத்தில் படங்கள் வெளியாகி வருவது தொடர்ந்து , பள்ளி நிர்வாகம் அனுமதியின்றி படகு இயக்கியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில் இதுவரை நடவடிக்கை இல்லாத நிலையே உள்ளது.சிவராம், ஆர்.டி.ஒ., : பூண்டி அருங்காட்டுகுளம் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் அனுமதியின்றி படகு இயக்கியது குறித்து கலெக்டர் , பொதுப்பணித் துறை முதன்மை பொறியாளர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.