திண்டுக்கல்: இதுவரை அமைக்கப்படாத ரோடுகள், சாக்கடை இல்லாமல் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் கழிவுநீர், மழை நேரங்களில் டூவீலர்களை தடுமாற செய்யும் மண் ரோடுகள், வராத குடிநீர், இல்லாத பஸ் நிறுத்தம் புகார் அளித்தாலும் கண்டு கொள்ளாத அதிகாரிகள் என திண்டுக்கல் திருப்பதி நகர் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர.திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் உள்ள திருப்பதி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் ராமன்,பொருளாளர் சுரேஷ்குமார், இணைச்செயலர் தேவி கூறியதாவது : திருப்பதி நகரில் ஆண்டுக்கணக்காகியும் ரோடுகள் அமைக்கவில்லை. மணல் ரோடுகளிலே தொடர்ந்து பயணிக்கிறோம். மழை நேரங்களில் இங்குள்ள ரோடுகள் சகதியாய் மாறி டூவீலர்களில் செல்வோரை விழச்செய்கிறது. கார்களில் சென்றால் கார் டயர்கள் பள்ளத்தில் சிக்கிவிடுகிறது. அதிலிருந்து வெளியில் வரவே பெரும்பாடாய் உள்ளது. நடமாட முடியவில்லை
ரோடு போடாததால் ரோட்டோரங்களில் செடிகள் வளர்ந்து உள்ளன. சில இடங்களில் தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வெளியில் மக்கள் நடமாட முடியவில்லை. விஷ பூச்சிகள் வந்தால் கூட கண்ணுக்கு தெரிவதில்லை. பஸ் ஏற வேண்டுமென்றால் நகரின் பின்புறம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தை தாண்டி ஓடைப் பட்டி பிரிவிற்கு செல்ல வேண்டியதாக உள்ளது. பள்ளி முடித்து வரும் மாணவர்கள், பணி முடித்து வருவோர், கோயிலுக்கு சென்று வரும் பெண்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர். செயின் பறிப்பு, டாஸ்மாக் குடிமகன்கள் ரோட்டில் நிற்பது போன்ற காரணங்களால் சிரமப்படுகின்றனர். நகரில் பஸ் ஸ்டாப் கேட்டும், அடிப்படை வசதிகள் கோரியும் மனுக்கள் எழுதி எழுதி ஓய்ந்து விட்டோம். யாருமே கண்டு கொள்ளவில்லை
சாக்கடை இல்லாததால் எந்நேரமும் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. இதனால் எங்கள் பகுதி சுகாதாரக்கேடாய் உள்ளது. மழை நேரங்களில் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு கழிவுநீர் தேங்கி விடுகின்றன. , ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி குடிநீர் தெருக்களுக்கு வந்தது. தற்போது தெரு குழாய்கள் காத்து வாங்குகின்றன. நல்ல குடிநீர் இல்லாமல் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை தான் தொடர்கிறது. இங்குள்ள பிரச்னைகள் குறித்து கிராம சபை கூட்டத்தில் மனுக்கள் கொடுத்தும் யாருமே கண்டு கொள்ளவில்லை. இப்பகுதிக்கென ஒதுக்கப்பட்ட டிரான்பார்மர் வேறு இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பவர் சப்ளை மிகவும் குறைவாக உள்ளது. லோ வோல்டேஜ் மின்சாரத்தில் மின்சாதன பொருட்கள் பழுதாகின்றன. இதற்காக இன்வர்ட்டர் வாங்க வேண்டியிருக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரும் அவதிப்படுகிறோம். உரிய தீர்வு காண மீண்டும், மீண்டும் கோரிக்கை வைக்கிறோமே தவிர தீர்வுதான் கிடைத்தபாடில்லை என்றனர்.