| ADDED : மே 03, 2024 06:25 AM
திண்டுக்கல்: தினமலர் செய்தி எதிரொலியாக சிறுமலையில் வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக 14 இடங்களில் ஊராட்சி சார்பில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.கோடை காலம் தொடங்கியதால் சிறுமலை உள்ளிட்ட பல்வேறு வன பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டு வனவிலங்குகள் தண்ணீரின்றி தவிக்கின்றன. எங்கு தேடியும் தண்ணீர் கிடைக்காத வனவிலங்குகள் அருகிலிருக்கும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் ஏப்.11 ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சிறுமலை ஊராட்சி சார்பாக சிறுமலை வழித்தடங்களில் 14 இடங்களில் 30 லிட்டர் தண்ணீர் தொட்டிகளை புதிதாக அமைத்து நீர் நிரப்பபட்டது. தொட்டிகளில் தண்ணீர் ஊற்றிய சிறிது நேரத்தில் கூட்டம் கூட்டமாக குரங்குகள் வந்து தண்ணீரை ஆனந்தமாக குடித்து மகிழ்ந்தது. மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார்,சிறுமலை ரேஞ்சர் மதிவாணன்,ஊராட்சி தலைவர் சங்கீதா வெள்ளிமலை,பி.டி.ஓ.,க்கள் கண்ணன்,ராஜசேகர்,தி.மு.க.,ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை பங்கேற்றனர்.