தி.மு.க., ஆட்சி நடக்கும் போதெல்லாம் பெண் சமுதாயம் முன்னேற்றம் பெறுகிறது அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
ரெட்டியார்சத்திரம்: ''தி.மு.க., ஆட்சி நடக்கும் போதெல்லாம் பெண் சமுதாயம் முன்னேற்றம் பெறுகிறது.'' என, அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.ரெட்டியார்சத்திரம் அக்கரைப்பட்டி தனியார் கல்லுாரியில் நடந்த சுய உதவி குழுக்களுக்கான கடன் வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடக்கும் போதெல்லாம் பெண் சமுதாயம் முன்னேற்றம் பெறுகிறது. கடந்த காலத்தில் இலவச டி.வி., சமையல் காஸ், வங்கி கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. குடிசை வீடுகள் இல்லாத நிலையை உருவாக்க ஊரக வளர்ச்சித் துறை மூலம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் திட்டமிட்டு, இந்தாண்டு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை, மாணவர், மாணவி உயர்கல்வி உதவித்தொகை, இலவச பஸ் பயணம் என மாதந்தோறும் சராசரியாக ஒரு குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் மாநில அரசு மறைமுகமாக வழங்குவதால் பெண்கள் சேமிக்க துவங்கியுள்ளனர் என்றார்.அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், தமிழக பெண்கள் பொருளாதாரத்தில் உயரவும், வாழ்வாதாரம் செழிக்கவும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சுய உதவி குழு பெண்களுக்கான கடன் வழங்கலை துவக்கி வைத்தார். திராவிட மாடல் ஆட்சி நாயகன் முதல்வர் ஸ்டாலின் கூட்டுறவு துறை மூலம் வழங்கிய 5 பவுன் வரை பெறப்பட்ட நகை கடனை தள்ளுபடி செய்து வாழ்வாதாரத்தை காப்பாற்றினார் என்றார். கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார்.எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், காந்திராஜன், திண்டுக்கல் மேயர் இளமதி முன்னிலை வகித்தனர்.1,392 சுய உதவி குழுக்களுக்கு ரூ.123.54 கோடி வங்கி கடன் உத்தரவுகள் வழங்கப்பட்டது. திட்ட அலுவலர் திலகவதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, கிழக்கு மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன் பங்கேற்றனர்.