ஏன் இந்த சுணக்கம்: ஊராட்சிகளுக்கு இரு மாதமாகியும் வராத நிதி
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் வசூல் செய்யப்படும் வீட்டு வரி, தொழில் வரி, கடைகளுக்கான வரி என அனைத்து வரி தொகைகளும் ஆன்லைன் மூலம் சென்னையில் உள்ள தனி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. அங்கு வரவு வைக்க மீண்டும் அதே தொகை அந்தந்த ஊராட்சிகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும்.ஊராட்சிகளுக்கு வரும் இந்த தொகையை கொண்டுதான் குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை பணிகளை ஊராட்சி நிர்வாகங்கள் கவனித்து வருகின்றன. இந்த தொகை இரு மாதமாக வரவில்லை. ஊராட்சி நிர்வாக காலம் 3 மாதங்களே உள்ள நிலையில் கடைசி காலகட்டத்தில் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட தேவைகளை சரியாக செய்ய வேண்டும் என ஊராட்சி தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த முறையை போல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா நடைபெறாத என்பது ஒருபுறம் இருக்க, இந்த நிதியையும் நிறுத்தியுள்ளதால் ஊராட்சி தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஊராட்சிப் பகுதி மக்களின் நலன் கருதி வரி வசூல் நிதியை விரைந்து வழங்க அரசு முன் வர வேண்டும் .