குறைதீர் கூட்டத்தில் 187 பேர் மனுக்கள் வாயிலாக முறையீடு
திண்டுக்கல்: சுடுகாடு இல்லை, அஞ்சலி ரவுண்டான மறுசீரமைப்பு பணியினை விரைந்து முடித்திடுக என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் பலர் முறையிட்டனர்.திண்டுக்கல்லில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 187 மனுக்கள் பெறப்பட்டன. இதை துறை அலுவலர்களிடம் வழங்கிய கலெக்டர் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.1.91 லட்சம் மதிப்பீட்டிலான நவீன செயற்கை கையை கலெக்டர் வழங்கினார். உதவி ஆணையாளர் (கலால்) பால்பாண்டி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன், செல்வம் கலந்துகொண்டனர். சுடுகாடு இல்லை
வேடசந்துார், எரியோடு, மறவப்பட்டி கிராம மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், எங்கள் பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். 6 தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு பாதையினை தனி நபர்கள் மறித்து விட்டனர். உரிய நடவடிக்கை எடுத்து பாதை ஒதுக்கி தர வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.திண்டுக்கல்லையடுத்த செட்டிநாயக்கன்பட்டி சி.பி.எம், முன்னாள் கவுன்சிலர் செல்வநாயகம் அளித்த மனுவில், திண்டுக்கல்லின் முக்கிய பகுதியான அஞ்சலி ரவுண்டானாவை விரிவுபடுத்தும் பணிகள் நடக்கிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவரும் முக்கியமான பகுதி என்பதால் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். இதேபோல் செட்டிநாயக்கன்பட்டி அம்பேத்கர் காலனியில் சேதமடைந்த மேல்நிலை தொட்டியினை உடனடியாக பராமரிப்பு செய்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.