உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொழிலாளி கொலையில் 3 சிறார்கள் கைது: மதுபோதையால் சீரழிந்த வாழ்க்கை

தொழிலாளி கொலையில் 3 சிறார்கள் கைது: மதுபோதையால் சீரழிந்த வாழ்க்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காப்பிளியப்பட்டியில் வீட்டில் துாங்கி கொண்டிருந்த கூலித்தொழிலாளியை முன்விரோதம் காரணமாக மதுபோதையிலிருந்த 3 சிறுவர்கள் கொலை செய்த நிலையில், போலீசார் அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர். தாடிக்கொம்பு காப்பிளியப்பட்டி ஏ.டி.காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி காளீஸ்வரன்,25, இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்து விட்டு மது அருந்திய நிலையில், தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் அதிக மதுபோதையில் தெருக்களில் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது காளீஸ்வரன்,அவர்களிடம் சென்று ரகளையை, நிறுத்த முயன்ற போது தகராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அக்கம்பக்கத்தினர் வந்து தகராறை முடித்து வைத்தனர். காளீஸ்வரனுக்கும், அவருடன் தகராறில் ஈடுபட்ட 3 சிறுவர்களின் ஒருவரின் தந்தைக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இதனால் ஆத்திரத்தில் இருந்த மூவரும் இரவு 11 மணிக்கு வீட்டில் துாங்கி கொண்டிருந்த காளீஸ்வரனை, இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்தனர். அதிலும் ஆத்திரம் தீராததால் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர். தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், 3 சிறுவர்களும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று 3 சிறுவர்களையும் தாடிக்கொம்பு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

போதையால் சிதைந்த சிறுவர்கள்

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். அவர்களுக்கு மது பாட்டில்கள், போதை வஸ்துக்கள் எப்படி கிடைத்தது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு டாஸ்மாக்குளில் மது வழங்ககூடாது. மீறி வழங்கினால் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த வயதுடைய சிறுவர்களுக்கு மது கிடைத்து போதை தலைக்கேறி அவர்களின் வாழ்க்கை முழுவதும் சிறையில் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. போலீசாரும் சிறுவர்களுக்கு யாராவது மது வழங்கினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
ஜன 01, 2025 19:39

குடிகாரர் அரசின் கைய்ங்கர்யம் இளம் சிறார்களையும் விட்டு வைக்க வில்லை. மது போதையில் கொலை.அவர்கள் வாழ்க்கை கைதிகளாக பிற்காலத்தில் ரௌடிகளாக...


புதிய வீடியோ