மாவட்டத்தில் ரூ.214.37 கோடியில் 6125 கனவு இல்லங்கள்
திண்டுக்கல்: ''திண்டுக்கல் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.214.37 கோடி மதிப்பில் 6,125 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக'' மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி தெரிவித்தார். பள்ளி வகுப்பறைகள், ரேஷன் கடைகள், அங்கன்வாடிகள் புதியதாக கட்டப்படுகிறதா...
ரூ.8.81 கோடி மதிப்பில் தற்போது வரை பள்ளிகளில் 23 புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 24 கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன. ரூ.3.32 கோடி மதிப்பில் 26 புதிய ரேஷன் கடை கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. 40 கடைகளுக்கு பணிகள் நடந்து வருகின்றன. மேலும் அங்கன்வாடி குழந்தைகளுக்காக 68 அங்கன்வாடி மைய புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 88 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. புதியதாக சமத்துவபுரம் உருவாக்கப்படுகிறதா....
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கொழுமங்கொண்டான் ஊராட்சியில் சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் 100 வீடுகள் கட்டும் பணி ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதர அடிப்படை உட்கட்டமைப்பு பணிகளும் நடக்கிறது. கனவு இல்லம் திட்ட பணிகள்
வீடற்ற, குடிசையில் வாழும் ஏழை மக்களுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் வீதம் 6125 வீடுகளுக்கு ரூ.214.37 கோடியில் பணிகள் நடைபெறுகிறது. புதியதாக சாலை பணிகள் நடைபெறுகிறதா...
ஊரக பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு பொதுமக்களுக்கும் பயன்பெறும் வகையில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.224.76 கோடி மதிப்பில் 598.70 கி.மீ., நீளத்திற்கு புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 96.02 கி.மீ .,நீளத்திற்கான 65 சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுகாதார மையங்கள் கட்டும் பணிகள் எந்த நிலையில் உள்ளது...
பொது மக்களின் சுகாதாரம், மருத்துவ சிகிச்சை மேம்பாட்டிற்காக 15வது மத்திய நிதிக் குழு மான்ய திட்டத்தின் கீழ் 2021--22 முதல் 2024--25 வரை துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார சுகாதார மையங்கள் என 20 பணிகளுக்கு ரூ.8.72 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி பெறப்பட்டு ரூ.5.25 கோடி செலவினத்தில் 6 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 14 பணிகள் நடைபெற்று வருகிறது. ஆதிதிராவிடர் பகுதிகளுக்கு தனித்திட்டங்கள் ஏதும் உள்ளதா.
அயோத்தி தாச பண்டிதர் குக்கிராமம் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மக்கள் அதிகம் வசிக்கும் ஊராட்சிகளை தேர்வு செய்து அம்மக்களுக்கு தேவையான அடிப்படை, அத்தியாவசிய பணிகளான சிமென்ட் சாலை, குடிநீர் ,மயான அனுகுசாலை வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 81 பணிகளுக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு ரூ.3.39 கோடி செலவினத்தில் 55 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 26 பணிகள் நடைபெற்று வருகிறது. பழங்குடியினருக்கு வீடு கட்டும் பணிகள் ...
பழங்குடியினர், இருளர் இன மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட பழங்குடியினர்களுக்கான மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2022-- 23 ம் நிதியாண்டில் 51 வீடுகள் கட்டும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 35 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 16 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணிகள்...
ஊரக பகுதிகளில் உள்ள பொது மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2024--25ம் ஆண்டில் 16,154 நீர் ஆதார பணிகள், வேளாண் சார் பணிகள் ,ஊரக அடிப்படை உட்கட்டமைப்பு பணிகளில் 3113 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 13,041 பணிகள் நடைபெற்று வருகிறது. 1,96,540 குடும்பங்கள் , 2,10,842 பயனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.