தார் ரோடாக மாறிய வண்டிப்பாதை
வடமதுரை: தும்மலக்குண்டு ரோட்டையும், ஆண்டிமாநகரையும் இணைக்கும் வகையில் இருந்த வண்டிப்பாதை தினமலர் செய்தி எதிரொலியாக தார் ரோடாக மாறியுள்ளது. வடமதுரை பேரூராட்சி கிராமங்களான சீத்தப்பட்டி, உடையாம்பட்டி, தும்மலக்குண்டு பகுதி மக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நுாற்பாலைகளுக்கு வேலைக்கு செல்வதற்கும், திண்டுக்கல் நகருக்கு செல்வதற்கும் ஆதம்ஸ் நகர் வழியே சுற்றுப்பாதையில் அதிக துாரம் பயணிக்கும் நிலை உள்ளது. வடமதுரை திருக்கண் ரோட்டில் உடையாம்பட்டி அருகில் இருந்து பிரியும் 500 மீட்டர் வண்டிப்பாதை சிக்காளிப்பட்டி ரோட்டுடன் இணைக்கிறது. அங்கிருந்து அரசு அனுமதி பெற்ற விஸ்தரிப்பு குடியிருப்பு பகுதிகள் வழியே பாதை வசதிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தை மேம்படுத்தி தார் ரோடாக மாற்றினால் பல கிராம மக்கள் பயன்பெறுவர் என தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வலியுறுத்தியது. இதன் பலனாக தற்போது உடையாம்பட்டி - ஆண்டிமாநகர் இடையே இருந்த வண்டிப்பாதை தற்போது தார் ரோடாக மாற்றப்பட்டுள்ளது.