சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுமை போர்வை அமைப்பு
மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சுற்றுச்சூழலை மேம்படுத்துகின்றனர் சின்னாளபட்டி அருகே அ.குரும்பபட்டி நடுநிலைப் பள்ளி பசுமை போர்வை அமைப்பினர்.சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்த, பசுமையை பராமரிப்பதன் அவசியத்தை குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுத்தும் பணியில் அரசு பள்ளிகளின் பசுமை சார்ந்த அமைப்புகள் ஈடுபட்டு வருகிறது. சின்னாளபட்டி அருகே அ.குரும்பபட்டி நடுநிலைப் பள்ளியில் செயல்பட்டு பசுமை போர்வை அமைப்பு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மரக்கன்று வழங்கல், நடுதல், சமூக சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கல்வி சார்ந்த செயல்பாடுகளில் மாணவர், ஏழை பெற்றோருக்கு உதவுதலை ஊக்கப்படுத்துகின்றனர். சுற்றுச்சூழலை மாசடைதலிலிருந்து மீட்பதுடன் தொடர்ந்து பாதுகாப்பது அவசியம். இதற்கான விழிப்புணர்வை, மாணவ சமுதாயத்தில் மக்கும் பொருட்களை பயன்படுத்துவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முகாம்களை நடத்துகின்றனர். பசுமை சூழலை உருவாக்க, நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு அவற்றை நல்ல முறையில் பராமரித்தும் வருகின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கல், அவரவர் இல்லத்தில் வளர்ப்பதற்காக இவை வழங்கப்பட்டு, தொடர் பராமரிப்பு மேற்கொள்வதற்கு ஏற்ப ஊக்குவிக்கப்படுகின்றனர். மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு, சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் ஒழிப்பு குறித்த பிரசாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு எண்ணத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு விழா காலத்தின் போதும் பல்வேறு வகையான பசுமை விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படுகிறது. மாணவர்களின் மனத்தில் பசுமை சூழல் பராமரிப்பு, நீர் மேலாண்மையின் அவசியம், பாலிதீன் ஒழிப்பின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நோயின்றி வாழலாம்
பொற்செல்வி,பள்ளி தலைமையாசிரியர்,பசுமை போர்வை அமைப்பு, அ.குரும்பபட்டி: மலை வளம் குறைவதால் மழை வளம் குறைகிறது. மலைப்பகுதிகளில் மரங்கள் வெட்டி அளிக்கப்படுகிறது. சமவெளிப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்கும் முயற்சியில் சிறு அளவில் பங்கெடுக்க முயற்சி மேற்கொள்கிறோம். காலநிலை மாற்றம் புவி வெப்பம் மக்களை அச்சுறுத்துகிறது. எதிர்கால பூமியின் சூழ்நிலை எப்படியாக மாறும் என்பதை கணிக்க முடியவில்லை. அடர் வன நடவு முறை ஜப்பானின் (மியாவாகி) குறுகிய பரப்பில் அதிக அளவில் மரங்களை நடவு செய்து வளர்க்கும் வகையினை சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். மாணவர்களை, விதைப்பந்து தயாரிப்பு குறித்த பயிற்சி மூலம் ஊக்கப்படுத்தி வருகிறோம். மழைக்காலத்தில் பொதுமக்கள், பெற்றோர், மாணவர்களுக்கு மரக்கன்றுகளை கொடுத்து நடவு செய்யும் பொழுது, மரங்கள் வளரும். எத்தனை மரங்கள் நடுகிறோம் என்பது மட்டுமின்றி, நடவு செய்யப்பட்ட ஒவ்வொரு மரத்தையும் காப்பாற்றி வளர்க்க வேண்டியது முக்கியம். பிற உயிரினங்கள் வாழ உகந்ததாக இருந்தால் மட்டுமே, ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்த முடியும். நோயின்றி வாழ்வதற்கு துாய்மையான காற்றை சுவாசிப்பது அத்தியாவசியம். மஞ்சள் பை வழங்குகிறோம்
பத்மாவதி,ஒருங்கிணைப்பாளர், பசுமை போர்வை, அ.குரும்பபட்டி: நுகர்வுக் கலாசாரம் வெகுவாக மாறுகிறது. எந்தப் பொருள் வாங்க சென்றாலும் கையை வீசிக்கொண்டு செல்லும் வழக்கமே மக்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. டீ, காபி வாங்கும் சூழலில், பாலித்தீன் கவரில் சூடாக வாங்கி வந்து, பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றி அருந்தும் பழக்கம், கொடிய நோய்களுக்கு வலியுறுத்துகிறது என்பதை தெரியாமலே வாடிக்கையாக்கி விட்டோம். மஞ்சப்பை வழங்கி வருகிறோம் சுற்றுச்சூழலுக்கு மண்ணுக்கு எதிரான பாலிதீன் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம். தூய்மையான காற்று பெற மரக்கன்றுகளை கொடுத்து வளர்க்க வலியுறுத்துகிறோம். விதை பென்சில், பேப்பர் பேனா ஆகியவற்றை பள்ளி மாணவர்களுக்கு வழங்குகிறோம். பயன்படாத பல்புகள், மின்னணு பொருட்களை குப்பையில் வீசாமல், தனியே பிரித்து துாய்மை பணியாளரிடம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.