வழியில்லா ஊருக்கு பாலத்துடன் புதிய பாதை
வடமதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக வழியின்றி மக்கள் அவதிப்பட்ட கொன்னையம்பட்டியில் அரசு இடத்தில் புதிய பாதை, 3 வறட்டாறு பாலங்கள் அமைக்கும் பணி துவங்கியது.புத்துார் வறட்டாறு குறுக்கிடுவதால் மண்டபத்தோட்டம் வடக்கு களம், கொன்னையம்பட்டி கிராமங்கள் மழை நேரத்தில் துண்டிக்கப்படுகிறது. கொன்னையம்பட்டிக்கென வழியின்றி சண்டை, சச்சரவுடன் மக்கள் தனியார் நிலத்தை பயன்படுத்துகின்றனர்.இரு வரட்டாறுகள் இணையும் கெங்கையூர் தடுப்பணைக்குள் இருக்கும் தரைப்பாலம் ஒவ்வொரு வெள்ளத்திலும் பாதிப்படைந்தது. தாழ்வான தரைப்பாலத்தால் தடுப்பணை உயரமும் குறைந்து வறட்டாறு நீர் தும்மனிக்குளம் செல்வதில் சிக்கல் இருந்தது. இப்பிரச்னை தொடர்பாக தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இதன் பலனாக தற்போது அரசு இடம் வழியே புதிய வழித்தடத்தில் கொன்னையம்பட்டிக்கு பாதை, பாலம் ரூ.ஒரு கோடியில் அமைகிறது. மண்டபத்தோட்டத்தில் ரூ.ஒரு கோடி, கெங்கையூர் தடுப்பணை பகுதியில் ரூ.1.54 கோடி என 3 இடங்களில் பாலம் கட்ட பூமி பூஜை நடந்தது. காந்திராஜன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் கருப்பன், துணைத்தலைவர் செந்தில், செயல் அலுவலர் அன்னலட்சுமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், பொறுப்பாளர் பாண்டி, வடமதுரை நகர செயலாளர் கணேசன் பங்கேற்றனர்.