| ADDED : ஜூலை 25, 2025 02:53 AM
மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 306 ஊராட்சி , ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நகராட்சி பகுதிகளை யொட்டிய முதல் நிலை ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் ,கிராமங்களில் வசிக்கும் மக்களும் அடிப்படை வசதிகளுக்காக அல்லாடுகின்றனர். ஊராட்சிகளில் பரப்பளவு, மக்கள் தொகை, நிதி ஆதாரத்திலும் இலக்கை எட்டும் அளவிற்கு தகுதியான ஊராட்சிகள் உள்ளன. அதாவது 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை, ஆண்டுக்கு ரூ.30 முதல் 40 லட்சம் வரை வருவாய் வருகிறது. வருமானம் வரும் ஊராட்சிகளாக இருந்தாலும் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இருப்பது இல்லை. ஊராட்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட குறைந்த அளவில் மட்டுமே சுகாதாரபணியாளர்கள் உள்ளனர். குறைந்தளவு துப்புரவு தொழிலாளர்களால் ஊராட்சிகளில் சேரும் குப்பையை அகற்ற முடியவில்லை. இதனால் ஆங்காங்கே குப்பையை கொட்டி மாத கணக்கில் வைக்கின்றனர். சில இடங்களில் தீ வைத்து எரித்து வேலைபளுவை குறைக்கின்றனர். இதனால் சுற்றுச் சூழல் மாசுபடும் நிலை உருவாகிறது. ஊராட்சியை பொதுமக்கள் அணுகினால் இருக்கிற தொழிலாளர்களை வைத்து ஊரை சீர்படுத்துகிறோம் வேறு என்ன செய்வது என செயலர்கள் கை விரிக்கின்றனர். கிராமங்களில் சேரும் குப்பையை அகற்ற டிராக்டர் வசதி கூட முறையாக இருப்பது இல்லை. இதனால் சுகாதார சீர்கேட்டில் பாதிக்கின்றனர். குடிநீரும் போதுமான அளவு கிடைப்பது இல்லை. வாரம் ஒரு முறை, பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் பெறும் நிலை உள்ளது. பல கிராமங்களில் தற்போது வரை சாக்கடை, தெருக்களில் சாலை வசதி, மின்விளக்கு, குடிநீர் விநியோகம், குப்பை மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லாமல் உள்ளன.மழை பெய்தாலே சாக்கடை வசதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி சுகாதார பிரச்னையை ஏற்படுத்துகிறது.இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது.