இதையும் கவனியுங்க சார் : பயன்பாடின்றி அடைபட்டுள்ள பாலங்கள்
நான்குவழி, மாநில, கிராமப்புற மாவட்ட இதர சாலைகள் என அனைத்து ரோடுகளில் ஆங்காங்கே நீர் கடந்து செல்ல வசதியாக சிறியது முதல் பெரிய அளவு வரை பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பெரிய பாலங்களை பொருத்தவரை அவ்வளவு எளிதாக அடைபடாது. கன மழை பெய்தால் எப்படியும் அதன் வழியே நீர் கடந்து சென்றுவிடும். ஆனால் சிறிய பாலங்களை பொருத்தவரை ஆண்டிற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்தால் மட்டும் அந்த பாலம் கட்டியதன் பலன் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இதுதவிர பல இடங்களில் முறையாக திட்டமிடல் இருந்து நீர் புகும், வெளியேறும் பகுதி நில உரிமையாளர்களது எதிர்ப்பு காரணமாக பாலம் கட்டிய பின்னர் அடைக்கப்படுகின்றன. இவ்வாறான பகுதிகளில் பாலத்திற்கு செலவிட்ட பணம் முழுவதுமே வீணாகிறது. பாலங்கள் கட்டிய பின்னர் அதனுள் நீர் புகும், வெளியேறும் பகுதிகளை முறையாக சுத்தம் செய்து பராமரிக்காததால் நீர் தார் ரோடுகளில் சென்று அரிமானம் ஏற்படுகிறது. இவ்விடங்களில் அடுத்த சில மாதங்களிலேயே ரோடு குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. மாவட்டத்தில் அடைப்பட்டு கிடக்கும் பாலங்களை சுத்தம் செய்து முறையாக பராமரிப்பு செய்திட மாவட்ட நிர்வாகம் தகுந்த வழிகாட்டுதல்களை அரசு துறைகளுக்கு வழங்க வேண்டும்.