ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்றுக குறைதீர் கூட்டத்தில் முறையீடு
திண்டுக்கல்:இலவச வீட்டுமனை பட்டா வழங்குக, ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்றுங்க என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பலர் முறையிட்டனர்.கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 382 க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.கொடைக்கானலை அடுத்த குண்டுப்பட்டி கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பித்தும் பட்டா பெறாதவர்களுக்கு விரைவாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., இளைஞரணி மாவட்ட பொருளாளர் செல்வக்குமார் கொடுத்த மனுவில் , திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் 2-வது தெருவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக ஒரு கட்சியின் கட்டடம் கட்டப்படுகிறது. சம்பந்தப்பட்ட தனிநபரின் செயல் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டிருந்தார். ரோட்டில் அமர்ந்து குறைகளை கேட்ட கலெக்டர்
கலெக்டர் அலுவலகம் முன்பாக உள்ள பாலம் அருகில் 30-க்கு மேற்பட்டோர் அமர்ந்து பொதுமக்களுக்கு மனுக்கள் எழுதி கொடுக்கின்றனர். முதியவர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என பலர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குறைதீர் கூட்டத்திற்கு வந்த கலெக்டர் சரவணன் மனு எழுதுவோர்களின இடத்திற்கு சென்று அவர்களுடன் ரோட்டோரம் அமர்ந்து குறைகளை கேட்டறிந்தார். அவர் கூறுகையில், ''மனு எழுதிக்கொடுப்பவர்கள் சாலை ஓரங்கள், பாலத்தின் கீழ் பகுதிகளில் அமர்ந்துள்ளனர். இதனால் வெயில், மழைக்காலங்களில் அவர்கள் சிரமப்படுகின்றனர். மனு எழுதிக்கொடுப்பதற்கு பாதுகாப்பான இடம் ஏற்படுத்தி கொடுக்க துறை அலுவலர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.