ஆக்கிரமிப்பின் பிடியில் அப்பியம்பட்டி சுடுகாட்டுக்குளம்
ஒட்டன்சத்திரம்: அப்பியம்பட்டி சுடுகாட்டுக்குளத்தை சுற்றிய ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொப்பம்பட்டி ஒன்றியம் அப்பியம்பட்டி ஊராட்சியில் உள்ளது சுகாட்டு குளம் . இங்கு கரட்டுப் பகுதிகளில் பெய்யும் மழை நீர் ஒன்றுதான் நீராதாரம். தண்ணீர் தேங்கும் போது நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் குளத்தை சுற்றிய பல ஏக்கர் நிலங்களில் வேளாண் தொழில் நடக்கிறது. இங்குள்ள நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ள செடி கொடிகளை அகற்றி துார்வாரினால் பெய்யும் மழை நீர் வீணாகாமல் குளத்திற்கு வந்து சேரும். நீர் நிறைந்து ஓடையின் வழியாக மறுகால் சென்று திருப்பூர் மாவட்டத்திற்கு செல்கிறது. இந்த ஓடையில் உள்ள ஷட்டர் உடைந்திருப்பதால் மறுகால் செல்லும் நீர் தேங்குவதில்லை. இப்பகுதியில் ஓடையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பகுதியில் செடிகள் முளைத்து முட் புதர்களாக உள்ளது. இதனை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். குளத்தில் இருந்து நீர் வெளியேறும் பகுதியிலும் செடிகள் ஆக்கிரமித்துள்ளது. குளத்தில் உள்ள மரங்கள் முழுவதையும் அகற்றி குளத்தை ஆழப்படுத்தினால் அதிகமாக தண்ணீர் தேங்க வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் சுற்று பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் நிலை ஏற்படும். இதன்மீது அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். கரைகளை உயர்த்துங்க
குப்புசாமி, விவசாயி, அப்பியம்பட்டி: சுடுகாட்டு குளத்தின் கரைகள் மிகவும் தாழ்வாக உள்ளது. கரைகளை உயர்த்தி குளத்தை ஆழப்படுத்துவதன் மூலம் அதிக அளவு நீரை தேக்கி வைக்க முடியும். இதனால் கிணறுகளில் தண்ணீர் மட்டும் உயர்வதுடன் நீர் இருப்பு வேகமாக குறையாது. நீர் வெளியேறும் பகுதியில் உள்ள செடிகள்,குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஷட்டரை சீரமையுங்க
கந்தசாமி, விவசாயி, அப்பியம்பட்டி : சுடுகாட்டு குளத்தில் தண்ணீர் வெளியேறி செல்லும் ஓடையில் உள்ள ஷட்டர் சேதமடைந்துள்ளது. இந்த ஷட்டரை சீரமைத்து தண்ணீர் தேங்கினால் இன்னும் அதிகப்படியான நிலங்களில் விவசாயம் செய்யலாம். குளத்தை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும்.