மேலும் செய்திகள்
முன் மழலையருக்கான பழங்கள் தின நிகழ்ச்சி
13-Jan-2025
பட்டிவீரன்பட்டி: சேவுகம்பட்டி சோலைமலை அழகர்பெருமாள் கோயில் திருவிழாவில் விவசாயம் செழிக்க வாழைப்பழம் சூறைவிடும் நிகழ்ச்சி நடந்தது.இக்கிராமத்தில் உள்ள 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சோலைமலை அழகர்பெருமாள் கோயிலில் விவசாயம் செழிக்கவும், மும்மாரி மழை பெய்யவும் விவசாயிகள் வேண்டி கொள்கின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறியதும் இக்கோயிலில் நடக்கும் வாழைப்பழம் சூறைவிடும் விழாவில் பங்கேற்று வாழைப்பழங்களை சூறையிடுகின்றனர். இதையொட்டி நேற்று நடந்த இவ்விழாவில் காவல் தெய்வமான ரெங்கம்மாள் கோயிலில் பெரிய பாத்திரங்களில் வாழைப்பழங்கள் நிரப்பப்பட்டு அதற்கு மாலை அணிவித்து பூஜை நடத்தப்பட்டது. முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளம், வான வேடிக்கையுடன் வாழைப் பழ கூடைகளை சுமந்தபடி வந்தனர். பெருமாள் கோயில் முன்பாக உள்ள மண்டு கோயிலில் நடந்த பூஜைக்கு பின் பெருமாள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டன. அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் கோயிலுக்கு வெளியே வாழைப்பழங்களை சூறைவிட்டனர். கீழே விழுந்த வாழைப்பழங்களை பெருமாளின் பிரசாதமாக நினைத்து பக்தர்கள் வீட்டிற்கு எடுத்து சென்றனர்.கோயில் நிர்வாகிகள் கூறியதாவது: இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் குடியிருக்கும் இந்த ஊரை சேர்ந்தவர்கள் திருவிழா நாளன்று தவறாமல் வந்து கலந்துகொள்வார்கள். இந்த ஊரைச் சுற்றி விவசாய பகுதியாக இருப்பதால் விவசாயம் செழிப்பதற்காகவும், மும்மாரி மழை பெய்யவும் விவசாய தோட்டங்களில் விளைந்த வாழைப்பழங்கள் சூறை விடப்படுகின்றன என்றனர்.
13-Jan-2025