உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெரிய வெங்காயம் விலை வீழ்ச்சி

பெரிய வெங்காயம் விலை வீழ்ச்சி

திண்டுக்கல்: மகாராஷ்டிரா மாநிலத்தில் இருப்பு வைக்கப்பட்ட பெரிய வெங்காயம் அதிகளவில் வந்ததால் திண்டுக்கல்லில் விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.10 க்கு நேற்று விற் பனையானது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் பெரிய வெங்காயம் அதிகம் விளைவிக்கப்படுகிறது. திண்டுக்கல் புறநகரில் வெங்காயத்திற்கு என தனி மார்க்கெட் உள்ளது. மார்க்கெட் திங்கள், புதன், வெள்ளியில் கூடுகிறது. இங்கு வரும் மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட வியாபாரிகள் பெரிய வெங்காயத்தை மொத்தமாக வாங்கி விற்பர். வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து வெங்காயம் அனுப்பப்படும். பெரிய வெங்காயத்தை பொறுத்தவரையில் ஆந்திரா கர்னுார், பெங்களூரு, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் இருந்து லாரிகளில் மொத்தமாக திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக், புனே, ஜோலாப்பூர், அகமது நகர், தவான்கரே ஆகிய இடங்களில் பெரிய வெங்காயம் அதிகளவில் அறுவடை செய்யப்படுகிறது. பருவமழை பாதிப்பால் அறுவடை செய்த வெங்காயத்தை சேமிக்க முடியாமலும், விற்பனை செய்ய முடியாமலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் வெங்காயத்தை அந்த மாநில அரசே கொள்முதல் செய்து இருப்பு வைத்தது. அவ்வாறு இருப்பு வைக்கப்பட்ட வெங்காயம் நாடு முழுவதும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. 300 டன் வெங்காயம் திண்டுக்கல்லிற்கு வந்துள்ளன. இதனால் இதன் விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.10 க்கு விற்கப்படுகிறது. பத்து நாட்களுக்கு முன்பு 200 டன் வரத்து இருந்த நிலையில் கிலோ ரூ.25க்கு விற்கப்பட்டது. வியாபாரிகள் கூறியதாவது: அரசு வெங்காயம் பெயரில் 80 சதவீதம் இருப்பு வெங்காயம் வந்துள்ளதால் விலை குறைந்துள்ளது. இருப்பு வைக்கப்பட்ட வெங்காயம் என்பதால் தரமானதாகவும் இல்லை. அதே நேரம் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வெங்காயம் ரூ.18 வரை விற்பனையாகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ