| ADDED : நவ 27, 2025 05:51 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் பேசிய பா.ஜ.,கவுன்சிலர் தனபாலன் ,அமைச்சர் சக்கரபாணி உறவினர் வீடு அருகே மழைநீர், சாக்கடைநீர் முழங்கால் அளவுக்கு தேங்குகிறது. அமைச்சர் மீது உங்களுக்கு தனிப்பட்ட கோபமா என பேச,இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்க பா.ஜ.,கவுன்சிலர் 3 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் பேசிய 14வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் தனபாலன் , மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை பிரச்னை உள்ளது. இதுபற்றி தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. 14வது வார்டில் தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணியின் உறவினர் குடியிருக்கிறார். அவரது வீடு அருகே மழைநீர், சாக்கடைநீர் முழங்கால் அளவுக்கு தேங்குகிறது. அமைச்சர் மீது உங்களுக்கு தனிப்பட்ட கோபம் இருந்தால் என பேசும்போதே அவரின் பேச்சுக்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். தனபாலனை சூழ்ந்து கொண்டும் முற்றுகையிட்டனர். அப்போது தி.மு.க., கவுன்சிலர்கள், அமைச்சர் பற்றி அவதுாறு பேசுவதை ஏற்கமுடியாது. இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அமைச்சர் குறித்து கவுன்சிலர் பேசியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என கூச்சலிட்டனர். 15 நிமிடங்களுக்கு கூச்சல், குழப்பம் நீடித்தது. அப்போது மேயர் இளமதி, கவுன்சில் கூட்டத்தில் அரசியல் செய்வதை அனுமதிக்க முடியாது. பா.ஜ.,உறுப்பினர் தனபாலனை 3 மாதம் சஸ்பெண்ட் செய்கிறேன். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்கள் கைகளை உயர்த்தலாம் என்றார். பெரும்பாலானனோர் கைகள் உயர்த்த சஸ்பெண்ட் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை கண்டிக்கும் வகையில் கவுன்சிலர் தனபாலன், பறிக்காதே பறிக்காதே கவுன்சிலரின் ஜனநாயக உரிமையை பறிக்காதே. நாறுகிறது நாறுகிறது திண்டுக்கல் மாநகராட்சி நாறுகிறது என கோஷமிட்டப்படி வெளியேறினார். அவர் கூறுகையில்,''கவுன்சிலர்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே தி.மு.க., கவுன்சிலர்கள் ஒன்றுகூடி என்னை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என திட்டமிட்டு முடிவு செய்துவிட்டனர். எனது சஸ்பெண்டுக்கு முழுக்காரணம் மேயர், துணை மேயர் தான். மக்கள் பிரச்னையை பேசுவதற்கு இடமளிக்காமல் ஜனநாயக உரிமையை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.