உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிராம சபை கூட்டத்தில் பிரதமர் குறித்து அவதுாறு   குறைதீர் கூட்டத்தில் பா.ஜ., துணைத் தலைவர் முறையீடு

கிராம சபை கூட்டத்தில் பிரதமர் குறித்து அவதுாறு   குறைதீர் கூட்டத்தில் பா.ஜ., துணைத் தலைவர் முறையீடு

திண்டுக்கல்: தாமரைப்பாடியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதுாறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில் பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன் முறையிட்டார். கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 226 மனுக்கள் பெறப்பட்டன. 17 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். தமிழ்ப்புலிகள் மாவட்ட செயலாளர் கணேச பிரகாஷ் தலைமையில் நிலக்கோட்டை, ஜம்புதுரைக்கோட்டையை அடுத்த ஜே.உத்துப்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில்,எங்கள் கிராமத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் ஓடை பாதையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக புகார் கொடுத்தால் அம்மையநாயக்கனுார் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்தனர். திண்டுக்கல் தாமரைப்பாடியை சேர்ந்த பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன் கொடுத்த மனுவில், அக்.11 ம் தேதி தாமரைப்பாடியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சிலர் அவதுாறாக பேசி உள்ளனர். அவர்கள் ஊராட்சிக்கு சம்பந்தமில்லாத நபர்கள். ஊராட்சிக்கு சம்பந்தமில்லாத நபர்களை கிராம சபை கூட்டத்தில் பேச அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி பழநி அடிவாரத்தை சேர்ந்த பெருமாள் தனது மனைவி உஷா, மகள் திவ்யா உடன் கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்தார். அவர்களை போலீசார் தடுத்தனர். விசாரணையில், இலவச வீட்டுமனை பட்டா கிடைக்காததால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய வந்தது தெரியவந்தது. இதையடுத்து கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி கூறியப்படிபோலீசார் எச்சரித்து அனுப்பினர். *இதுபோல் திண்டுக்கல் தவசிமடையை அடுத்த விராலிபட்டி சூசைராஜ் 65 , தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு போலீசார் தடுத்தனர். விசாரணையில், இவருக்கு சொந்தமான நிலத்தை உறவினர்கள் போலி ஆவணம் மூலம் விற்றுவிட்டனர். அவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும். போலி ஆவணம் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை விசாரணைக்காக தாடிக்கொம்பு போலீசார் அழைத்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ