புத்தகங்களும், இலக்கியங்களும் யோசிக்கத் துாண்டுகின்றன வேளாண் ஆராய்ச்சி உதவி முதன்மை இயக்குநர் பேச்சு
திண்டுக்கல் : ''புத்தகங்களும், இலக்கியங்களும் நம்மை யோசிக்கத் துாண்டுகின்றன'' என,வேளாண் ஆராய்ச்சிக் கழக உதவி முதன்மை இயக்குநர் சத்யா வேல்முருகன் பேசினார்.திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும்,இலக்கியகளமும் இணைந்து டட்லி மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தும் 3வது நாள் புத்தகத் திருவிழாவில் அவர் பேசியதாவது: பருவ நிலை மாற்றம் இன்றைக்கு உலகம் முழுவதும் பெரும் பிரச்னையாக உள்ளது. நீர்மேலாண்மையில் தவறு நடக்கிறது. நீர்நிலைகளையும், நீராதாரங்களையும் பாதுகாப்பதற்கான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது. அரசின் கொள்கைகள், திட்டமிடல் சரியாக இருந்தபோதிலும் மக்களை ஒருங்கிணைக்க முடியவில்லை. மனிதன் இல்லாத எந்த செயல்திட்டமும் வெற்றி பெறாது. நீர் பயன்பாட்டுக்கு முதல் முறையாக தணிக்கை முறை அமலுக்கு வரப்போகிறது. அரசு நேரடியாக எல்லாவற்றையும் செய்ய முடியாது. மக்களின் ஒருங்கிணைப்பும் அவசியம்.பருவ நிலை மாற்றத்துக்கு மக்களும் ஒரு காரணம். தொடர் கதிரியக்கம் காரணமாக இரவு நேரங்களில் கூட இந்த பூமியை விட்டு வெப்பம் வெளியேற முடியவில்லை. நீர் நிலைகளும், நீர் ஆதாரங்களும் விவசாயத்துக்கு மட்டுமானதல்ல, இந்த பூமி குளிர்ச்சியாக இருப்பதற்கும் தேவைப்படுகிறது. அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்கிய நம் முன்னோர்களின் வரலாற்றையும், பண்பாட்டையும், இன்றைக்கு ஒளி ஊடகங்கள் நம்மிடமிருந்து பறிக்கின்றன.புத்தகங்களும், இலக்கியங்களும் நம்மை யோசிக்கத் துாண்டுகின்றன. உள்வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்கின்றன. அகண்ட அறிவு கொண்ட சமுதாயமாகவும், எதிர்கால தலைமுறை குறித்து சிந்திக்கும் மக்களையும் உருவாக்கும் ஆற்றல் புத்தகங்களுக்கு உள்ளது என்றார்.இலக்கியக்கள செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். துணைச் செயலாளர் மாரிமுத்து வரவற்றார்.