| ADDED : டிச 29, 2025 05:33 AM
நிலக்கோட்டை:மாவட்டத்தில் உள்ள நுாலகங்களில் கிளை, பகுதி நேர நுாலகங்களின் நேரத்தை மாற்ற வேண்டும் என்றும், குரூப் 1, 2 தேர்வர்களுக்கான புத்தகங்கள் வீணாகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.மாவட்டத்தில் 82 ஊர் புற நூலகங்கள் 49 கிளை நூலகங்கள் 11 பகுதி நேர நூலகங்கள் 10 இரண்டாம் நிலை நூலகங்கள் 1 மாவட்ட மைய நூலகம் உள்ளது. இவற்றில் கிளை, ஊர் புற நூலகங்களின் நேரத்தையும் மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. பகுதி நேர நூலகங்களை முழுநேர நூலகங்களாகவும் மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தல் அதிகரித்துள்ளது.போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோர் நூலகங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் தேவையை பொருட்டு நூலக துறையின் முன்னாள் இயக்குனர் இளம்பகவத் அறிவு தேடல்களுக்கான புத்தகங்களை வழங்கி போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இப்போட்டி தேர்வுகளில் குரூப் 4, போலீஸ், வி.ஏ.ஓ., போன்ற நான்காம் நிலை வேலை தேடுபவர்கள் தான் நூலகங்களை பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெறுகின்றனர். அதே சமயத்தில் குரூப் 1 குரூப் 2 தேர்வுகளுக்கான தரமான புத்தகங்களும் அனைத்து நூலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு தயாராகுபவர்கள் கோச்சிங் சென்டர்களை நாடி செல்வதால் இப்புத்தகங்களை பயன்படுத்தாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு குரூப் 1 குரூப் 2 தேர்வர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நூலகங்களில் உள்ள புத்தகங்களை பயன்படுத்த செய்ய வேண்டும் அல்லது இந்த புத்தகங்களுக்கு பதிலாக வேறொரு தலைப்புகளில் புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தரம் உயர்த்த வேண்டும்
கிராமப்புற, பகுதி நேர நுாலகங்களை தரம் உயர்த்த வேண்டும். நுாலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் வழங்க வேண்டும். குரூப் ஏ தேர்வர்களை நூலகத்தில் உள்ள புத்தகங்களை பயன்படுத்த வைக்க வேண்டும்.
- கணேசன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்
நிலக்கோட்டை