உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செங்கல் சேம்பர் கண்காணிப்பாளர் காதல் விவகாரத்தில் கொலை; 4 நாட்களுக்கு பின் உடலை பெற்ற உறவினர்கள்

செங்கல் சேம்பர் கண்காணிப்பாளர் காதல் விவகாரத்தில் கொலை; 4 நாட்களுக்கு பின் உடலை பெற்ற உறவினர்கள்

திண்டுக்கல்; பழநி அருகே செங்கல் சேம்பர் கண்காணிப்பாளர் சரவணன் 23, காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக ஓடிசா மாநில தொழிலாளி, அவரது 2 மகள்கள் கைதானதையடுத்து 4 நாட்களுக்கு பிறகு சரவணன் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர். தும்பலபட்டியைச் சேர்ந்த சரவணன் அப்பகுதியிலுள்ள செங்கல் சேம்பரில் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தார். அங்கு வடமாநிலத்தவர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் ஆக., 9 இரவு சேம்பருக்கு செல்வதாக கூறிச்சென்ற சரவணன் இறந்து கிடந்தார். அவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திண்டுக்கல்லில் சரவணனின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர். 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சேம்பரில் வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அவரின் தந்தையிடம் விசாரணை நடத்தினர். 17 வயது சிறுமியை காதலித்து வந்த சரவணன் அவரை பார்ப்பதற்காக ஆக.,9 இரவு செங்கல் சேம்பருக்கு சென்றார். அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிறுமியின் தந்தை, மகள்களான 17 வயது, 14 வயது சிறுமிகள் சேர்ந்து தள்ளிவிட்டதில் சரவணன் இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். நான்கு நாட்கள் போராட்டத்திற்கு பின் சரவணனின் உடலை நேற்று காலை 11:30 மணிக்கு அவரது உறவினர்கள் பெற்று சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி