| ADDED : பிப் 25, 2024 05:54 AM
நத்தம் : திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து விண்ணை தொடும் அளவிற்கு உள்ளதால் சாதாரண மக்களின் வீடு கட்டும் கனவு கேள்விக்குறியாக உள்ளது. வரலாறு காணாத இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் கிரஷர் ஜல்லி உற்பத்தி சார்ந்த பொருட்கள் விலை திடீர் உயர்வால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டுமான பணிகளுக்கு கிரஷர் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. தற்போது ஆற்று மணலுக்கு மாற்றாக அரசு எம்.சாண்ட் பயன்படுத்தும் நிலையில் அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.டீசல் , மூலப்பொருட்களின் விலை உயர்வை விட கிரஷர், ஜல்லி உற்பத்தி சார்ந்த கட்டடப்பொருட்களான எம்.சாண்ட், பி.சாண்ட் ,ஜல்லி விலை அபரிதமாக அதிகரித்துள்ளது. இதனால் கட்டுமான பணி ஸ்தம்பித்துள்ளது.கட்டடம் கட்டுவதற்கு இதுவரை சதுர அடிக்கு 2350 ரூபாயாக இருந்தது. தற்போது விலை உயர்வால் சதுர அடிக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சதுர அடிக்கு 2,550 ரூபாய்க்கு மேல் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடு கட்டும் மக்கள் மீது கூடுதல் சுமையை வைப்பதால் கட்டடம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதியதாக வீடு கட்டுவோரின் கனவு பொய்த்து விடும் சூழல் உள்ளது.விலையேற்றத்தால் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் ,இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் கட்டுமானப்பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்யும் ஒப்பந்ததாரர்களையும் இந்த விலையேற்றம் பாதித்துள்ளது.