ரயில் வேகத்தை அதிகரிக்க பணி ஒரு ரயில் ரத்து; 3 வழி மாற்றம்
திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் 3,4வது பிளாட்பாரம் தண்டவாளத்தில் ரயில் வேகத்தை அதிகரிக்கும் பணி நடப்பதால் கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் வேறு வழித்தடத்தில் மாற்றிவிடப்பட்டுள்ளது.திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வழித்தடத்தில் தினமும் 100க்கு மேலான ரயில்கள் கடந்து செல்கின்றன. இங்குள்ள 3,4வது பிளாட்பாரம் வழியாக வட,தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அதிகளவில் செல்கின்றன. ஏற்கனவே இதில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் கடந்து செல்கின்றன. தற்போது 75 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் கடந்து செல்வதற்கான தண்டவாள பணிகள் நேற்று தொடங்கின. இதனால் இவ்வழித்தடத்தில் வரும் கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் நேற்று இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டது. மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்,குருவாயூர் எக்ஸ்பிரஸ்,மும்பை எக்ஸ்பிரஸ் என 3 ரயில்கள் திண்டுக்கல் வராமல் விருதுநகர், காரைக்குடி,மானாமதுரை திருச்சி வழியாக மாற்றிவிடப்பட்டது. செப்.10 லிலும் இதே நிலை தொடரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதை அறியாத பயணிகள் ரயில்வே ஸ்டேஷன் வந்து நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.