| ADDED : பிப் 06, 2024 07:13 AM
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.4188 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஒட்டன்சத்திரத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து அவர் கூறியதாவது: குடி தேவைக்காக பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இருந்தபோதிலும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்பவும், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டும் புதிய குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனுார், நெய்க்காரப்பட்டி பேரூராட்சிகள், 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1422 ஊரக குடியிருப்புகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களில் உள்ள 236 ஊரக குடியிருப்புகளுக்காக காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.4187.84 கோடி நிர்வாக ஒப்புதல் அரசாணை வழங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் ஜல்ஜீவன் மிஷன், அம்ரூத் திட்டங்களின் நிதி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தினால் 3 நகராட்சிகள் 7 பேரூராட்சிகள், 3728 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் என்றார்.கலெக்டர் பூங்கொடி, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி,ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் திலகவதி, தலைமை பொறியாளர் நடராஜன், செயற்பொறியாளர்கள் மாரியப்பன், ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.