காவிரி நீர் பெறுவதில் கவனம் தேவை: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டி
பழநி: தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பழநி முருகன் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின் நிருபர்களிடம் கூறியதாவது: 2027 ஜன.,21 முதல் தமிழ்நாட்டில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். கள்ளுக்கான தடை நியாயமானது, காவிரி தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என நிருபிக்கும் அரசியல்வாதிகளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படும். கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகு அணைகள் உடையும் என்ற நிலையில் தான் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் குறுவை சாகுபடி சாத்தியமாகவில்லை. காவிரியில் உரிமை நீர் விகிதாச்சார அடிப்படையில் தினந்தோறும் பங்கீடு என தீர்ப்பு பெறப்பட்டிருந்தால் இருமாநில உறவு கெட்டிருக்காது. தமிழக அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். ஜவ்வரிசியில் அதிக ரசாயன பொருட்கள் கலப்பதால் நுகர்வு குறைந்து அதன் விலையும் குறைந்துள்ளது. இந்த கலப்படத்தை தடுத்தால் மட்டுமே மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளுக்கு எதிர்காலம் இருக்கும். சூப்பர் எல் நினோ தாக்கத்தை தடுக்க தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் இந்த ஆட்சி கவிழாது. ஆனால் அடுத்த ஆண்டு வரும் வறட்சியை கையாளும் விதத்தில் தான் அது தெரியும் என்றார்.