கல்லுாரி மாணவியை கடத்தி காரில் பாலியல் தொல்லை?
திண்டுக்கல், : தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த 22 வயது நர்சிங் கல்லுாரி மாணவி, நேற்று காலை தேனி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது பெண் உட்பட ஏழு பேர் அந்த மாணவியை காரில் கடத்தி, திண்டுக்கல் வந்தது; வழியிலேயே பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்ததும் மாணவியை இறக்கி விட்டு தப்பினர். பாதிக்கப்பட்ட மாணவி மகளிர் போலீசாரிடம், தனக்கு நடந்த கொடுமையை கூறினார். போலீசார், அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவி கூறியபடி 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.தேனி பஸ் ஸ்டாண்டில் மாணவி கடத்தப்பட்டதாக கூறிய இடத்தில் இருந்த 'சிசிடிவி' கேமரா காட்சிகளையும் அங்குள்ள போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால், அதுகுறித்த காட்சிகள் இல்லாததால், குழப்பமடைந்த தேனி போலீசார், திண்டுக்கல் அரசு மருத்துவமனை வந்து விசாரித்தனர். மதியம் 1:00 மணிக்கு துவங்கிய விசாரணை, இரவு 8:00 மணி வரை நீடித்தது.