கொலைக்கு கத்தி கொடுத்த கல்லுாரி மாணவர் கைது
எரியோடு: எரியோடு அருகே பிளக்ஸ் பேனரில் படம் இடம் பெறாதது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தச்சு பட்டறை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ,கத்தியை எடுத்து வந்து உதவிய கல்லுாரி மாணவரும் கைது செய்யப்பட்டார்.நாகையகோட்டை அருகே என்.பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் மருதுபாண்டி 32. புதுரோட்டில் தச்சு பட்டறை நடத்தி வந்தார். இவரது உறவினர் கட்டட தொழிலாளி தனபால் 29. கிராமத்தில் நடந்த விழா பிளக்ஸ் பேனரில் படங்களை தவிர்த்தது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. மே 21 மாலை பள்ளிக்கூடத்தானுார் செட்டிக் குளத்தில் பாண்டியனுடன் மருதுபாண்டி மதுகுடித்த நிலையில் அலைபேசியில் தனபாலை வரவழைத்து 'பிளக்ஸ்' படம் தொடர்பாக பிரச்னை செய்து தாக்கினார். ஆத்திரமடைந்த தனபால் தனது உறவினரான கல்லுாரி மாணவர் தினேஷ்குமாரை அலைபேசியில் தொடர்பு கொண்டு கத்தி கொண்டு வர சொன்னார். அவர் எடுத்து வந்த கத்தியை கொண்டு மருதுபாண்டியை குத்தி கொலை செய்தார். இதை தடுக்க முயன்ற பாண்டியன் படுகாயமடைந்தார். தனபால் கைதான நிலையில், கத்தி கொடுத்த கல்லுாரி மாணவர் தினேஷ்குமாரும் 19, கைதானார்.