ரோட்டோரம் நிறுத்தும் வாகனங்களால் நெரிசல்: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் அவதி
மாவட்டத்தில் கொடைக்கானல் சுற்றுலா தலமாகவும், பழநி ஆன்மிக தலமாகவும் உள்ளது.திண்டுக்கல்,ஒட்டன்சத்திரம், வடமதுரை, நத்தம், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை,கன்னிவாடி பகுதிகள் போக்குவரத்து மிகுந்த பகுதியாக உள்ளது.இச்சூழலில் கிராமப்புறம், நகர்பகுதியில் வாகன நிறுத்தங்கள் இல்லாததால் வாகனங்கள் ரோட்டோரமே நிறுத்தும் போக்கு உள்ளது. இதனால் நாள்தோறும் விபத்து, போக்குவரத்து நெரிசலும், எதிரே வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாத நிலை உள்ளது.நாகரீக சூழலில் அனைத்து பகுதிகளிலும் வாகனப் பெருக்கம் ஏற்பட்ட நிலையில் அதை நிறுத்துவதற்கான சூழலை ஏற்படுத்தாமல் கிராமங்கள் முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு வித்திடும் வகையில் மெயின் ரோடு, இணைப்பு ரோடுகளில் வாகனங்கள் நிறுத்தும் போக்கு உள்ளது.பெருநகரங்களில் உள்ள உணவகம் ,விடுதிகளில் வாகனம் நிறுத்தங்கள் ஏற்படுத்தாத நிலையில் அவை ரோட்டோரமே நிறுத்தப்படுகிறது. இத்தகைய சூழலை நன்கு அறிந்த போலீசார் இதன் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. நெடுஞ்சாலை துறையினரும் கவனம் செலுத்துவதில்லை. நாளுக்கு, நாள் இது போன்ற நிலை அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசல் என்பது மாவட்டத்தில் தவிர்க்க முடியாதாக உள்ளது. இதன் மீது போலீஸ், நெடுஞ்சாலைத்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இந்நிலையை தவிர்க்கலாம்.