இ- பைலிங்கை எதிர்த்து நகல் எரிப்பு போராட்டம்
திண்டுக்கல்: இ-பைலிங் முறையை நிறுத்திவைக்கக்கோரி, சுற்றறிக்கை நகலை வழக்கறிஞர்கள் எரித்துப் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும், நீதிமன்றங்களில் இ- பைலிங் முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது. இ-பைலிங் மூலமாகவே மனு தாக்கல் செய்யவேண்டும் கோர்ட்டு நடைமுறைகள் பின்பற்றவேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இ-பைலிங்க்கு முறையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்காமல் நடைமுறைப்படுத்துவதை நிறுத்திவைக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை வலியுறுத்தி 20 நாட்களாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் என போராடுகின்றனர். இதனால் வழக்குப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல்லில், வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் முன்பு இ- பைலிங் சுற்றறிக்கை நகலை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தலைவர் குமரேசன், செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தனர். கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் வரை இ-பைலிங்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். பழநி: பழநி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர் சங்கம், அட்வகேட் அசோசியேசன் சார்பில் நகல் எரிக்கும் போராட்டம் நடந்தது. அசோசியேசன் தலைவர் மணிகண்ணன், வழக்கறிஞர் சங்க பொருளாளர் ஆசைத்தம்பி தலைமை வகித்தனர்.