ரோடுகளை குடைந்து கொடிக்கம்பங்கள், பேனர்கள் வைப்பதால் விபத்து அபாயம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, நீதிமன்ற உத்தரவு என பல இருந்தாலும் பேனர்கள் வைப்பது, ரோடுகளில் கொடிக் கம்பங்களை ஊன்றுவது குறைந்தபாடில்லை. இதற்கு இந்த கட்சிதான் என்றுமில்லாமல் கட்சி பேதமின்றி வைக்கப்படுகிறது. இதனால் விபத்து அபாயம் உருவாகும் நிலை உள்ளது. மாவட்டத்தில் எங்கு திரும்பினாலும் பேனர்களுக்கு பஞ்சமில்லை. பிறந்தாள், விருது விழா, நினைவுநாள், கட்சி நிகழ்வுகள், அரசியல் தலைவர்கள் வருகை, பொதுக்கூட்டங்கள் என அனைத்து கட்சிகளும் தங்களின் தலைவருக்கு பேனர்களை ரோட்டோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கின்றனர். குறிப்பாக ரோட்டை குடைந்து கம்பிகளை ஊன்றுகின்றனர். சென்டிர் மீடியன்களில் ஓட்டை போட்டு அதில் கம்புகளை சொறுகி அதன்பிடியிலும் கொடிக்கம்பங்களை கட்டி விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நாள்தோறும் அவதிப்படுவது வாடிக்கையாகி வருகிறது. கட்சியினர் போலீசாரிடம் முறையான அனுமதியும் பெறுவதில்லை. அவர்களும் ஆளுங்கட்சி, கூட்டணி, எதிர்கட்சி என கண்டும் காணாமல் இருக்கின்றனர். சிக்னல்கள், சென்டர் மீடியன்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் எப்போது வேண்டுமானலும் காற்றில் பறந்து விபத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது. இதேபோல் நகரின் எல்லை , முக்கிய கடைவீதிப்பகுதிகளில் கட்டடங்களில் மாடிகளில் பல அடிகளில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இரும்பு கம்பிகளால் வைக்கப்பட்டுள்ள இந்த போர்டுகள் காற்றின் வேகத்தில் விழுந்து விடவும் வாய்ப்பிருக்கிறது. , அசம்பாவிதங்கள் நேரும் முன் அதன் உறுதித்தன்மையை சரிபார்த்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ரோடுகளை குடைவதால் பொதுச்சொத்து வீணாகிறது என்பதை பற்றி கவலையில்லாமல் தங்களின் தலைவர்களை சந்தோஷப்படுத்த பொதுமக்களை கஷ்டத்திற்கு உள்ளாக்குகின்றனர். வரும் காலம் தேர்தல் காலம் என்பதால் தற்போதே அரசியல் கட்சியினரின் பல கூட்டங்கள் நடக்கிறது. இதனால், கொடிக்கம்பங்கள், பேனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்க இவை அதிகமாகி ரோட்டை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு விபத்து அபாயத்தை ஏற்படுத்தும். இதன் மீது உரிய வழிமுறைகளை பின்பற்றவும் , விதிமுறைகளை வகுக்கவும் மாவட்ட நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.