திருப்பதி லட்டுக்கான நெய்யில் விலங்கு கொழுப்பு; நெய் அனுப்பிய திண்டுக்கல் நிறுவனம் மறுப்பு
திண்டுக்கல்:திருப்பதி லட்டு பிரசாதத்திற்கான நெய்யில் விலங்கு, மீன் கொழுப்பு கலந்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் நெய் அனுப்பிய திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் அதனை மறுத்துள்ளது.திருப்பதி லட்டு பிரசாதத்துக்கு பயன்படுத்தப்படும் நெய்யில், விலங்குகள் கொழுப்பு, மீன் கொழுப்பு கலந்திருப்பதாக கடந்த 3 மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. லட்டு பிரசாதத்துக்கான நெய் விநியோகம் செய்தது திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி எனும் பால் நிறுவனம் என தெரிய வந்ததையடுத்து பேசு பெருளானது. தொடர்ந்து, இந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்து ஆந்திர அரசு உத்தரவிட்டது. அதே நேரத்தில் நெய் வழங்கியதற்கான பணம் நிலுவையில் உள்ளதாக கூறி, தனியார் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை அறிந்த உணவுப் பாதுகாப்பு துறையினர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆய்வு நடத்தி மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர். அதன் முடிவுகள் பொது வெளியில் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் திண்டுக்கல் தனியார் நிறுவனம் திருப்பதிக்கு அனுப்பிய நெய், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் லெனி,கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் எங்கள் நிறுவனத்தின் சார்பில் நெய் அனுப்பப்பட்டது. பல்வேறு நிறுவனங்களிடமிருந்து திருப்பதிக்கு நெய் செல்கிறது. அந்த வகையில் எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே அனுப்பப்பட்டது. தற்போது அங்கு நெய் அனுப்புவது இல்லை. திருப்பதிக்கு அனுப்பிய நெய்யின் தரம் குறித்த ஆய்வு அறிக்கையின் தரவுகளும் எங்களிடம் உள்ளது. திருப்பதி தேவஸ்தானத்துக்கு பல நிறுவனங்களிடமிருந்து நெய் அனுப்பப்படுகிறது. அதில், எங்கள் நிறுவனம் அனுப்பியது 0.1 சதவீதம் கூட இருக்காது. உணவு பாதுகாப்புத் துறை, அக்மார்க் சார்பில் எங்கள் நிறுவனத்திலுள்ள நெய் தர மாதிரிக்கு சேகரித்துச் சென்றனர். எங்களது பொருட்கள் பல இடங்களில் விற்பனைக்காக உள்ளன. அங்கு சென்று எங்களது பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, அனைத்து பதில்களையும் எங்கள் நிறுவனத்தின் தர கட்டுப்பாட்டு அதிகாரிகளே தெரிவித்துவிட்டனர். 25 வருடங்களாக நிறுவனத்தை நடத்துகிறோம். நான் சொல்ல ஒன்றுமில்லை என்றார்.
அதிகாரிகள் ஆய்வு
திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் திண்டுக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நிறுவனத்தில் இருந்து வரக்கூடிய கழிவு நீரை ஆய்விற்காக எடுத்துச் செல்கிறோம். இந்த மாதிரிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்யப்படும். ஆய்வில் குறைகள் கண்டறியப்பட்டால் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் அனிதா தெரிவித்தார்.
பழநி பஞ்சாமிர்தத்திற்கு ஆவின் நெய்
ஏ.ஆர்., டெய்ரி நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகரன், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினராக ஒரு மாதத்துக்கு முன்பு வரை பதவி வகித்தார். இதனிடையே பழநி பஞ்சாமிர்தத்திற்கும் இந்த நிறுவனத்திலிருந்தே நெய் சென்றதாக தகவல்கள் வெளியாகின. இதனை அறநிலையத்துறை முழுமையாக மறுத்ததோடு, பஞ்சாமிர்தத்திற்கு பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளது.