உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாதாள சாக்கடை பிரச்னைக்கு அவுட்சோர்ஸ் முறையில் தீர்வு துணை மேயர்  தகவல்

பாதாள சாக்கடை பிரச்னைக்கு அவுட்சோர்ஸ் முறையில் தீர்வு துணை மேயர்  தகவல்

திண்டுக்கல்:''திண்டுக்கல் மாநகராட்சியில் நிலவும் பாதாள சாக்கடை பிரச்னைக்கு அவுட்சோர்ஸ் முறையில் ஆட்களை நியமித்து விரைவில் தீர்வு காணப்படும்''என , துணை மேயர் ராஜப்பா கூறினார்.திண்டுக்கல் மாநகராட்சியில் 2006--11 ல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக 22 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள இத் திட்டம் முறையான வடிவமைப்பு இல்லாததால் வார்டு மக்கள் நாள்தோறும் கடும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். திட்ட குழாய் சிறிய அளவில் அமைக்கப்பட்டுள்ளதாலும், மட்டம் முறையான அளவில் இல்லை என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது. கழிவுநீரோடு மண், குப்பை சென்று அடைத்து கொள்கின்றன. இதனால் தொடர்ச்சியாக ஆங்காங்கே கழிவுநீர் அடைத்து வீடுகள், ரோடுகளில் சூழ்ந்துவிடுகிறது. மழைக்காலத்தில் நிலைமை மிகவும் மோசமாகிறது. 17வது வார்டு அரசன் நகர் பகுதியில் சமீபத்தில் வீடுகள், தெருக்களில் பாதாள சாக்கடை நீர் தேங்கி தொற்று நோய் அபாயம் நிலவுகிறது. அப்பகுதி மக்கள், பா.ஜ., நிர்வாகிகள், கலெக்டர், மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. பாதாள சாக்கடை நீரை அப்பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் வெளியேற்றியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.இதனால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.,வினர் தெருக்களில் போஸ்டர் அடித்து ஒட்ட துவங்கி உள்ளனர்.துணை மேயர் ராஜப்பா கூறியதாவது:9, 13, 14, 15, 17 வார்டுகளில் பாதாள சாக்கடை பிரச்னை உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண மே 16ல் நான், மேயர், கமிஷனர் மூவரும் ஆலோசனை மேற்கொண்டோம். கான்ட்ராக்டர்கள் மூலம் பராமரிப்பு சரியாக நடக்கவில்லை. விரைவில் 'அவுட்சோர்சிங்' முறையில் ஆட்களை நியமித்து இதுபோன்ற பிரச்னைகள் வராதவாறு தீர்வு காணப்படும். மீதமுள்ள 26 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்போது இதில் உள்ள குறைகள் நேராதவாறு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி