கொடை கோக்கர்ஸ்வாக்கில் தடுமாறும் பயணிகள் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த வேண்டும்
கொடைக்கானல் : கொடைக்கானல் கோக்கர்ஸ்வாக்கில் முழுமை பெறாத வளர்ச்சி பணிகளால் சுற்றுலா பயணிகள் தடுமாறுகின்றனர்.கடந்தாண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3.16 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவங்கின. இப்பணிகள் தற்போது முழுமை பெறாமல் தரைப்பகுதியில் பதிக்கப்பட்ட கற்கள் ஒழுங்கற்று இடைவெளியுடன் இருப்பது, தரைப்பகுதியை பார்வையிடும் தொலைநோக்கி மைய பகுதியில் அமைத்த கற்கள் சிதறிய நிலை, முழுமை பெறாத வேலி, டிக்கெட் வழங்கும் நுழைவு பகுதியில் பல்லாங்குழி பள்ளங்கள் என இயற்கை அழகை ரசிக்க வருகை தரும் பயணிகள் அரைகுறை பணிகளால் நாள்தோறும் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். அகற்றப்படாத கட்டுமான குவியல் என பயணிகள் நொந்து கொள்ளும் நிலையில் கோக்கர்ஸ்வாக்உள்ளது. கோடை சீசனுக்கு வருகை தரும் பயணிகளின் பாதுகாப்பு கருதி நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.சத்தியநாதன் நகராட்சி கமிஷனர் கூறுகையில், 'கோக்கர்ஸ்வாக்கில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. தற்போது பயணிகள் வந்து செல்லும் பாதையில் முழுமை பெறாத பணிகளை மே 31 க்குள் சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.